சுண்டெலியால் உலகை ஈர்த்த டிஸ்னி(Disney, which drew the world by the mouse)

சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களைக்கூட பரவசப்படுத்தும் 'மிக்கி மௌஸ்' மந்திர கார்ட்டூன் பாத்திரத்தைப் படைத்தவர் வோல்ட் டிஸ்னி. மிக்கியின் குரலுக்குச் சொந்தக்காரரும் இதே டிஸ்னிதான்.

சுண்டெலியால் உலகை ஈர்த்த டிஸ்னி(Disney, which drew the world by the mouse)

அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 1901ஆம் ஆண்டு பிறந்தவர் வோல்ட் டிஸ்னி. ஆறு வயதில் இவரது குடும்பம் மிஸஸௌரியில் இருந்த ஒரு பண்ணைக்கு இடம்பெயர்ந்தது. மகிழ்ச்சியில் துள்ளினார். வீட்டிலும் வயலிலும் ஓடும் நாய், பூனை, எலி, கோழி, வாத்து, பசு, குதிரை எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்தார். எறும்புகள் புற்றுக் கட்டுவதையும் பார்த்தார். அவரது பண்ணையில் இருந்த சிவப்புச் சேவல் அவருக்கு மிகவும் பிடிக்கும். வயல்களில் ஓடும் கன்றுகளையும் முயல்களையும் ஓடுவது போலவே வரைய முயற்சித்தார்.

டிஸ்னி சிறுவனாக இருந்த போது நடந்த சம்பவம் இது. இவரது பண்ணைக்கருகில் வசித்து வந்த மருத்துவர் ஒருவர் சிறுவனின் ஓவியத் திறமையைக் கண்டு மிகவும் உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டினார். மருத்துவர் வளர்த்து வந்த செல்லக் குதிரையின் படத்தை வரைந்து காட்டச் சொன்னார். அப்போது இவரது வயது 9. குதிரையின் படத்தை மணிக்கணக்கில் வரைந்தார். படத்தை வரைந்து முடிக்கும் வரை மருத்துவரும் அவரது மனைவியும் குதிரையைப் பிடித்துக் கொண்டே நின்று கொண்டிருந்தனர். படத்தை வரைந்து முடித்த சிறுவன் சற்று பயத்துடனேயே காட்டினார்.

படத்தைப் பார்த்த தம்பதியர் மிகவும் நன்றாக இருப்பதாக மகிழ்ந்து பாராட்டினார்கள். பை நிறைய மிட்டாய்களைக் கொடுத்து மகிழ்ந்தனர். பாடசாலையில் படித்துக் கொண்டே தனது ஓவியத்திறமையையும் அவர் வளர்த்துக் கொண்டார். சிக்காகோ உயர்நிலைப் பள்ளியில் படித்த போது புகைப்படம் எடுக்கும் கலையையும் கற்றுக் கொண்டார். சிக்காகோ 'ஹெரால்ட்' பத்திரிகையில் பணிபுரிந்த கலைஞர் ஒருவர் நடத்திய நுண்கலைக் கழக வகுப்பில் கேலிச் சித்திரங்கள் (கார்ட்டூன்) வரையக் கற்றுக்கொண்டார்.

வோல்ட் டிஸ்னி வாய்ப்பு தேடி சினிமா ஸ்டூடியோக்களின் பக்கம் போன போது பொம்மை படம் போடுபவன் எல்லாம் எப்படி சினிமா எடுக்க முடியும் என்று கேலியாகச் சிரித்து அவமானப்படுத்தினார்கள். டிஸ்னி தனது 21ஆவது வயதில் ஹொலிவுட்டில் காலடி வைத்த போது நடந்த நிகழ்ச்சி இது. அனிமேஷன் சினிமாவுக்கு வரவேற்பு இருக்காது என்ற வாதத்தை டிஸ்னி ஒப்புக் கொள்ளவில்லை . அறிந்தவர் தெரிந்தவர்களிடம் எல்லாம் கடன் வாங்கி சொந்தமாக Alice in Cartoon Landஐ உருவாக்கினார். தனக்குக் கை கொடுக்கும் என்று இவர் நினைத்த இந்தப் படம் இவரின் காலை வாரி விட்டது. டிஸ்னி தோல்வியை ஒப்புக்கொள்ளும் ரகம் இல்லை.

திருப்புமுனை

சுண்டெலியால் உலகை ஈர்த்த டிஸ்னி(Disney, which drew the world by the mouse)
போதும் போதும் என்கிற அளவுக்கு ஏமாந்து விட்டேன். இனிமேல் ஏமாறப் போவதில்லை என்று சபதம் செய்து விட்டுக் காரியத்தில் குதித்தபோது டிஸ்னியின் சிந்தனைப் பொறியில் ஒரு சுண்டெலி சிக்கியது. அதுவே திருப்புமுனையாகவும் அமைந்தது.

எதுவுமே இல்லாமல் ரயிலில் கண்கள் கலங்க போய்க்கொண்டிருந்தவர் கண்களில் அங்கே எதையோ கொறித்துக்கொண்டிருந்த எலி ஒன்று கண்ணில் சிக்கியது. அதன் சேட்டைகள் இவருக்கு பிடித்திருந்தன. கொஞ்சமாக சிரித்தார் பென்சிலை எடுத்துக்கொண்டார். மனிதனின் சாயலில் ஓர் எலியை உருவாக்கினார்! அதற்கு மார்டிமர் மவுஸ் என பெயர் வைக்க, அது நன்றாக இல்லை என அவரின் மனைவி வைத்த பெயர் தான் மிக்கி. தனது கார்ட்டூனில் அந்தச் சுண்டெலிக்கு டிஸ்னி உயிர் கொடுத்தார். 'மிக்கி மௌஸ்' என்ற சாகாவரம் பெற்ற பாத்திரம் உதயமானது. அந்த எலியை உருவாக்கியதற்கு அவருக்கு சிறப்பு ஒஸ்கர் வழங்கப்பட்டது. முகத்துக்கு ஒரு வட்டம் இரண்டு காதுகளுக்கு இரண்டு வட்டம் என்று மூன்றே வட்டங்களில் பிறந்த மிக்கி மௌஸ், தான் பிறந்த ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே உலகையே தன் பக்கம் வளைத்துப் போட்டது. டிஸ்னி அடுத்தடுத்து தயாரித்த Steam boat willie, The Skeleton Dance போன்ற படங்களில் மிக்கி அடித்த கொட்டத்தை மக்கள் திறந்த வாய் மூடாமல் ஆச்சரியத்தோடு பார்த்து ரசித்தனர். பணம் குவிந்த அதே வேகத்தில் டிஸ்னியை அங்கீகாரமும் தேடி வந்தது. ஆம் 1932ஆம் ஆண்டு டிஸ்னி உருவாக்கிய ‘Flowers and Trees' என்ற திரைப்படத்துக்கு ஒஸ்கர் விருது கிடைத்தது. இந்த நேரம் டிஸ்னி டோனல்ட் டக் என்ற வாத்தை உலகத்துக்குப் பரிசாகப் பிடித்து வந்தார். சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தனை பேரும் அந்த வாத்தின் சேட்டைகளைப் பார்த்து மூச்சு முட்டச் சிரித்தனர்.

பீரங்கிகளையும் வெடிகுண்டுகளையும் பயன்படுத்தி ஹிட்லரும் முசோலினியும் மொத்த ஐரோப்பாவையும் ஆக்கிரமிக்கப் புறப்பட்ட நேரம் அது. டிஸ்னி ஒரு சுண்டெலியையும் வாத்தையும் வைத்துக் கொண்டு மொத்த உலகையும் முற்றுகையிட்டார். திரைப்படங்கள் மட்டுமல்ல டி.வி., கார்ட்டூன், புத்தகங்கள், டிஸ்னிலேண்ட் என்று டிஸ்னியின் சாம்ராஜ்யம் விரிவடைந்தது. தனது ஓவியர்களையும் கலைஞர்களையும் டிஸ்னி மாய்ந்து மாய்ந்து உற்சாகப்படுத்துவார். காரணம் டிஸ்னி சிறுவனாக இருந்தபோது இவருக்கு ஓவியம் வரைவதற்கு பேப்பரும் பிரஷ்ஷும் வாங்கிக் கொடுக்கும் அளவுக்குக் கூட இவரது வீட்டில் வசதி இல்லை . அது மட்டுமல்ல ஒரு முறை வீதி போட அரசாங்கம் வைத்திருந்த தாரை, குச்சியில் எடுத்து இவர் குதிரை, மாடு என்று ஓவியம் வரைய ஆரம்பித்தபோது இவரின் அப்பா இவரைத் திட்டினார். இவரின் ஓவிய ஆர்வத்துக்கு பள்ளிக்கூடத்திலும் ஏறக்குறைய இதே மாதிரி  உற்சாகம் தான்.

உலகத்திலிருக்கும் உல்லாசப் பொழுதுபோக்கு பூங்காக்களை வரிசைப்படுத்தினால் இன்று உலகத்திலேயே நம்பர் வன், அமெரிக்காவில்
இருக்கும் டிஸ்னி லேண்ட்தான். ஒட்டுமொத்த சொத்தையும் கொட்டி டிஸ்னி லேண்டை உருவாக்கினார் வோல்ட் டிஸ்னி. ஹொலிவுட்டே ஏளனமாகப் பார்த்தது. அவரின் அந்தக் கனவுக்குப் பின் சிறு வயது அழுகைகள் இருந்தன.
சுமார் ஆயிரம் ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் இந்த பார்க் பூலோகத்தில் இருக்கும் ஒரு சொர்க்கம். ஓர் ஆண்டுக்கு இந்த பார்க்குக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை என்ன தெரியுமா? சுமார் ஒன்றரைக் கோடி. இதில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என்னவென்றால் டிஸ்னி சிறுவனாக இருந்தபோது பள்ளிக்கூடம் போகும் வழியில் ஒரு சின்னப் பூங்கா இருந்தது. கட்டணம் செலுத்தினால்தான் அதன் உள்ளே போய் விளையாட முடியும். ஒவ்வொரு நாளும் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது டிஸ்னி அந்தப் பூங்காவை ஏக்கத்தோடு வெறித்துப் பார்த்து விட்டுத்தான் வீடு திரும்புவார். ஆனால், ஏழ்மையில் வாடிய சிறுவன் டிஸ்னியால் ஒரே ஒரு நாள் கூட அந்தப் பூங்காவுக்குள் சென்று விளையாட முடிந்ததில்லையாம். பிற்காலத்தில் பணத்திலே விழுந்து புரளும் அளவுக்கு டிஸ்னியிடம் செல்வம் சேர்ந்தாலும் சாதாரண அமெரிக்கர்களைப் போலத்தான் வாழ்க்கை நடத்தினார். வெற்றியாலும் செல்வத்தாலும் அவரின் வாழ்க்கை முறையை மாற்ற முடியவில்லை. இருந்தாலும் அவருக்கென ஒரே ஓர் ஆசை இருந்ததுண்டு. அது என்ன தெரியுமா? ரயில். சிறு வயதிலிருந்தே டிஸ்னிக்கு ரயில் என்றால் கொள்ளை ஆசை. அதனால் வசதி வந்த பிறகு அவர் தனது வீட்டைச் சுற்றி ரயில் பாதை போட்டு அதில் ஒரு பழைய கால ரயிலை அவரே ஓட்டி விளையாடுவாராம்.

சுண்டெலியால் உலகை ஈர்த்த டிஸ்னி(Disney, which drew the world by the mouse)
வாழ்வில் ஏழ்மையிலிருந்த போது அவமானம், தோல்விகளைத் தாங்கி தமது சுய முயற்சியால் முன்னேறிய எத்தனையோ மேதைகளை வரலாறு கூறும். அவர்களில் ஒருவர் இந்த மிக்கி மௌஸ் புகழ் டிஸ்னி. இவரது வாழ்க்கையிலிருந்தும் நாம் கற்க வேண்டிய பாடங்கள் பல உள்ளன!

Post a Comment

Previous Post Next Post