The Secret Of YOGIBABU SUCCESS STORY

யோகி பாபு, வெற்றியடைவதற்கு பணமோ அழகோ பின்புலமோ தேவையில்லை. அயராத உழைப்பு ஒன்றே போதுமானது என்பதற்கு நமது கண் முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் உதாரணம் ஆவார். வாழ்வில் ஒரு மனிதனால் எவ்வளவு அவமானங்கள் சோதனைகள் புறக்கணிப்புகள் தாங்க முடியுமோ அதை விட பத்து மடங்கு அவமானங்களை தனது வாழ்வில் அனுபவித்தவர். ஏன் இன்றுவரை அனுபவித்து கொண்டிருப்பவர். இன்று இவர் இத்தனை தூரம் வளர்ந்து இருந்தும் பணம் பேர் புகழ் அனைத்தும் இவரிடமிருந்து சமீபத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஒருவரால் படப்பிடிப்பின்போது இவரது உருவத்தை வைத்து மிக மோசமான முறையில் அவமானப்படுத்தப்பட்டார்.

The Secret Of YOGIBABU SUCCESS STORY

இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்த பின்னரும் கூட தீண்டத்தகாத நபராக இன்று வரை சிலரால் பார்க்கப்படும் யோகி பாபு. மூன்று வேளை உணவுக்கே வழி இல்லாமல் சினிமாவில் வாய்ப்புத் தேடி வீதிவீதியாக அலைந்து கொண்டிருந்த காலத்தில் எத்தனை அவமானங்களை சந்தித்து இருப்பார் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். இன்று இந்த பதிவை வாசித்த பின்னர் வெற்றி என்பது ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மட்டும் உரியதல்ல. வெற்றியை அதற்காக ஏங்கும் முயற்சி செய்யும், முயற்சியில் தோற்று பின் வாங்காத அனைவருக்கும் சொந்தமானது என்பதை நிச்சயம் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

யோகி பாபு, 1985இல் வாழைப்பந்தல் எனும் கிராமத்தில் பிறந்தார். தந்தை இராணுவத்தில் சேவை புரிந்தவர். எந்த பின்னணியும் இல்லாத மிக மிக நடுத்தர குடும்பம். தனது பாடசாலை பருவத்திலிருந்தே இவருக்கு இரண்டு கனவுகள். அதில் ஒன்று உதை பந்தாட்டம் இரண்டாவது இராணுவத்தில் இணைந்து தனது தாய் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்பது நான் பெரியவன் ஆனதும் நிச்சயம் இராணுவத்தில் இணைந்தே தீருவேன் என தனது நண்பர்கள் ஆசிரியர்களிடம் தொடர்ந்து கூறிக் கொண்டே இருப்பாராம் யோகிபாபு. உதைபந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்த யோகிபாபு மாநில அளவில் விளையாடும் அளவிற்கு அதில் திறமையானவராகவும் இருந்தார் எனவே ஃபுட்பால்(Football) கோட்டாவில் இராணுவத்தில் எளிதாக இணைந்து விடலாம் என்பதே இவரது பல நாள் கனவாக இருந்தது. இருந்தாலும் அதை இறுதிவரை இவரால் நிறைவேற்ற முடியாமலேயே போனது. பலமுறை முயற்சி செய்தும் இவரை இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளவேயில்லை. முயற்சி செய்து முயற்சி செய்து வெறும் தோல்விகளே எஞ்சின. இதற்கு மேல் இராணுவத்தில் தன்னை இணைத்துக் கொள்ளவே முடியாது என்பதை உணர்ந்தவர் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளானார்.

தனது வாழ்க்கையே இருண்டு விட்டதாக எண்ணி முடங்கிப் போனார். இருந்தாலும் ஏழை அல்லவா எத்தனை நாட்கள் முடங்கியே இருப்பது வயிற்றுக்கு உணவு வேண்டும் அவ்வுணவிற்கு பணம் வேண்டும் அப்பணத்தை சம்பாதிக்க வெளியேறினார் யோகிபாபு.

"வாழ்வில் நீங்கள் ஒரு மிகப்பெரும் திட்டத்தை வைத்திருந்தாலும் அதைவிட சிறந்ததொரு திட்டத்தை கடவுள் உங்களுக்காக வைத்திருப்பார். நீங்கள் சந்திக்கும் தோல்விகளும் பின்னடைவுகளும் அத்திட்டத்தை நோக்கி உங்களை நகர வைப்பவையே தவிர அத்திட்டத்திலிருந்து உங்களைத் தூரமாக்குபவையல்ல." இது போலவே கடவுள் யோகிபாபுவிற்கும் ஒரு திட்டத்தை வைத்திருந்தார்.

ஆரம்பத்திலிருந்தே இவருக்கு சினிமாவில் எந்த வித ஆர்வமும் இருக்கவில்லை. சினிமா என்பது கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தொழில் அதில் காண்பவர்கள் எல்லாம் கிண்டல் அடிக்கும் தனது உருவத்திற்கு நிச்சயம் இடமில்லை என்பதே இவரின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அந்நம்பிக்கையை மாற்றி எழுதும் நாளும் வந்தது. ஒரு நாள் விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்துக் கொண்டிருந்த தனது நண்பன் ஒருவனை காண படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வருகின்றார் யோகிபாபு. அங்கு இவரது உருவத்தைக் கண்ட லொள்ளு சபாவின் இயக்குனர் இவரையும் ஒரு வேடத்தில் நடிக்க அழைக்கின்றார். அந்த வேடம் மிக மிகச் சிறியதாக இருந்தாலும் அதில் இவருக்கு எந்தவித வசனமும் கொடுக்கப்படவில்லை என்றாலும் அத்தருணமே தன்னுள்ளும் தனது உருவத்தினுள்ளும் மறைந்திருக்கும் நடிகனை அடையாளம் காண்கின்றார் யோகி பாபு. தனது உருவம் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருப்பதால் இதை வைத்து சினிமாவில் கூட்டத்தில் ஒருவராக ஒரு ஓரத்தில் நின்றாலே நன்றாக சம்பாதிக்கலாம் என எண்ணினார்.லொள்ளு சபாவில் சிறிது காலம் நடித்துவிட்டு அதில் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தார். இருந்தாலும் அங்கு சரியான வருமானம் கிடைக்கவில்லை எனவே இங்கு கஷ்டப்படுவதற்கு பதிலாக சினிமாவில் வாய்ப்பு தேடலாம் என புறப்பட்டார். ஆனால் சினிமா இவர் எதிர்பார்த்த அளவுக்கு இலகுவானதாக இருக்கவில்லை. அங்கு இவர் கேட்டதெல்லாம் ஏதோ ஒரு ஓரமாக நிற்கும் கதாபாத்திரத்தைத்தான் ஆனால் அதைக்கூட அவ்வளவு எளிதாக இவரால் அடைந்து கொள்ள முடியவில்லை. கோடம்பாக்கத்தில் யோகி பாபுவின் கால் தடம் படாத இடமே இல்லை எனக் கூறுவார்கள்.

The Secret Of YOGIBABU SUCCESS STORY

அந்த அளவிற்கு அங்குள்ள சந்து பொந்துக்கள் சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவரிடமும் வாய்ப்பு கேட்டுச் சென்றார். ஆனால் அவர்கள் அனைவருமே இவரை ஒரு அருவருக்கத்தக்க பொருளாகவே பார்த்தார்கள். இவரது உருவத்தை காட்டி அவமானப்படுத்தினார்கள். உனக்கு சினிமா கேட்குதா எனக் கூறி துரத்திவிட்டார்கள். இவர் வாய்ப்பு கேட்டு அலைந்த பல இடங்களில் இவரை அருகில் கூட விடவில்லை. வெளியில் தெருவில் நிற்க வைத்தார்கள். வாட்ச்மேனை வைத்து துரத்திவிட்டார்கள். இவர் அருகில் நெருங்குவதையே ஒரு தீட்டாக கருதினார்கள். சென்ற இடமெல்லாம் அவமானம் கையில் எந்த வருமானமும் இல்லை. பல நாட்கள் ஒரு வேளை உணவுடனே கழிந்தன. பசியும் வேதனையும் வாழ்வின் ஒரு அங்கமாக மாறின. இன்று வாழ்வில் நாமெல்லாம் ஏதோ ஒரு அங்கீகாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருப்போம். அந்த அங்கீகாரம் நமக்கு கிடைத்ததோ இல்லையோ இதுவரை நம்மை யாரும் ஒரு கேவலமான ஜந்து வாகவோ அல்லது அருவருப்பானவராகவோ நடத்தி இருக்க மாட்டார்கள். இருந்தும் நம் மனதில் எத்தனையோ வருத்தங்கள் உள்ளன. எனில் யோகி பாபுவின் அன்றைய மனநிலை எவ்வாறு இருந்திருக்கும். யோகி பாபு சிறுவயதிலிருந்தே பல சோதனைகளைக் கடந்து வந்தவர். ஆனால் அவரால் கூட இந்த கேவலங்களையும் அவமானங்களையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை மிகவும் நொந்து போனார். இந்த சினிமா துறையை விட்டு சென்றுவிடலாம் என எண்ணினார்.

அனைவரும் உருவத்தை பார்த்து இவரை ஓரம் கட்டிக் கொண்டிருந்தபோது அந்த உருவத்தின் உள் மறைந்திருக்கும் உழைப்பை கண்டார் இயக்குனர் அமீர். அதனால் 2009இல் வெளிவந்த தனது யோகி திரைப்படத்தில் இவருக்கு ஒரு கதாபாத்திரத்தையும் வழங்கினார். அதன் விளைவாக அதன் பின் வெளிவந்த சில படங்களில் சிறுசிறு வேடங்கள் கிடைக்க ஆரம்பித்தன இருந்தாலும் அவை இவருக்கு கூறிக் கொள்ளும்படி எந்த அடையாளத்தையும் கொடுக்கவில்லை. இப்படியே 5 வருடங்கள் கடந்தன. 2014இல் சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அத்திரைப்படத்தில் சில காட்சிகளுக்கே இவர் தோன்றியிருந்தாலும் அதில் இவரது காமெடியும் நடிப்பும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. யாருப்பா இவன் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சினிமா வட்டாரத்திலும் பரவ ஆரம்பித்தது. அதே வருடத்தில் வெளியான யாமிருக்க பயமேன் திரைப்படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்றொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யோகி பாபு. படத்தில் ஒரு சில நிமிடங்களே தோன்றினாலும் அக்கதாபாத்திரம் அனைவரது மனதிலும் மிக ஆழமாக பதிந்தது. அப்போது பலர் இவரது பெயரை கூட அறிந்திருக்கவில்லை. ஆனால் பன்னி மூஞ்சி வாயனை அறியாதவர்கள் யாருமே இல்லை. அந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பரவி இருந்தது அந்தப் பெயர். இதுவரை காலமும் எந்த உருவத்தை வைத்து அனைவராலும் அசிங்கப்படுத்தப்பட்டாரோ அதே உருவமே இவருக்கான முதலாவது அங்கீகாரத்தைக் கொடுத்தது.

The Secret Of YOGIBABU SUCCESS STORY

அதன் பின்னால் பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக யோகி பாபுவை அணுக ஆரம்பித்தனர். சிறிது பெரிது என இவரை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக் கொண்டார். சந்தானம் காமெடியனாக நடிப்பதை விட்டதும் காமெடியனுக்கான ஒரு மிகப்பெரும் வெற்றிடம் தமிழ் சினிமாவில் உருவானது அதை லாபகமாக பிடித்துக்கொண்டார் யோகி பாபு. அஜித், விஜய் போன்ற ஜாம்பவான் நடிகர்களுடனும் நடித்தார். வளர்ந்து வரும் நடிகர்களுடனும் நடித்தார். விஜய் சேதுபதி உடன் இவர் நடித்த ஆண்டவன் கட்டளை திரைப்படமும் நயன்தாராவுடன் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படமும் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு மிகப்பெரும் அங்கீகாரத்தை கொடுத்தன. அதன்பின் இவரது வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருந்தது. இன்று யோகி பாபு இல்லாத ஒரு தமிழ் படத்தை காண்பது மிக அரிது. ஒரு படத்தின் வியாபாரத்தை தீர்மானிக்கும் அளவிற்கு இவரது வளர்ச்சி விண்ணை தொடுகின்றது. தான் எவ்வளவு உயரம் கண்டாலும் அவரிடம் இருக்கும் பணிவு சிறிதும் குறைந்துவிடவில்லை. அப்பணிவே இன்று வரை இவரை நம்பர் ஒன் இடத்தில் வைத்திருக்கிறது. இனியும் வைத்திருக்கும். நமது கற்பனையையும் தாண்டிய ஓர் அடிமட்டத்தில் ஆரம்பித்து நமது கற்பனையையும் கடந்து ஓர் வெற்றியை யோகி பாபுவினால் எவ்வாறு அடைய முடிந்தது. எது அதற்காக துணை நின்றது பணமா? அழகா? அல்லது செல்வாக்கா? நிச்சயம் இவற்றில் எதுவுமே இல்லை தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே அவரை இத்தனை பெரியதொரு உயரத்திற்கு கொண்டுவந்தது. இறுதியாக உங்களிடம் நாம் கேட்கும் ஒரே கேள்வி வாழ்வில் யோகி பாபு சந்தித்ததை விட ஒரு மிகப்பெரும் தோல்வியையும் அவமானத்தையும் நீங்கள் சந்தித்து விட்டீர்களா? இந்த அளவிற்கு சக மனிதனால் ஒதுக்கப்பட்டு ஒரு தீண்டத்தகாத பொருளாக நடத்தப்பட்டு தங்கள் அருகில் கூட சேர்க்காமல் வீதியில் நிறுத்தப்பட்டு வாட்ச்மேனை விட்டு துரத்தி அடிக்கப்பட்டு யோகி பாபுவே இன்று வருடம் பல கோடிகள் சம்பாதிக்கும் நட்சத்திர நாயகனாக வளம் பெறும் போது வாழ்வில் மிகப்பெரும் வாய்ப்புகளை எல்லாம் உள்ளங்கையிலே வைத்துள்ள உங்களால் எத்தனை பெரியதொரு வெற்றியை அடைந்து கொள்ள முடியும். சிந்தித்து செயலாற்றுங்கள்.

Post a Comment

Previous Post Next Post