கள்

வெட்டுக் கொத்தெல்லாம் போக ஆயிரத்தெண்ணூற்றிச் சொச்ச சில்லறையை எண்ணி வாங்கி பைக்குள் திணிக்கும் போது அன்னலட்சுமி காலையில் சொன்னது ஆயிரத்தோராவது முறையாக சாமிநாதனின் நெஞ்சை நுள்ளியது.

கள்
"ரெண்டு மாச வாடகை நிக்குது. வீட்டுக்காரன் அந்தச் சாட்டில அடிக்கடி வந்து பல்லிளிக்கிறான். கோழிக்குஞ்சை நாய் பாக்கிற மாதிரிப் பாக்கிறான். காசை முகத்தில விட்டெறிஞ்சாத்தான் எனக்கு நிம்மதி. இண்டைக்கெண்டாலும் தவறணைக்குப் போகாம நேர வீட்டை வாங்க."

வீட்டுக்காரனுக்குத் தெரிபடாமல் தலைமறைவாய் வேலைக்குப் போய் வந்துக் கொண்டிருந்தான் சாமிநாதன். தெருமுனையில் தலைக்கறுப்புத் தெரிந்ததோ திரும்பி மறைவதற்கு வகை தெரியாமல் திண்டாடுவான். ஆனால் சில நாட்களாக சாமிநாதனின் கண்ணில் படாமல் வீட்டுக்காரன் ஒளிந்து திரிவது போலப் பட்டது. ஏனென்று இன்றுதான் புரிந்தது.

"அன்னத்தில கண் வைச்சிருக்கிறான் ராஸ்கோல். என்ர வீட்டில வண்டில் விடப் பாக்கிறான் நாய்." நினைக்க நினைக்க கரப்பத்தான் பூச்சியை செருப்பால் அடித்து காலில் போட்டு நசிக்கிற வெறி வந்தது. ஒரு கால் "அதிவிசேச சாராயம்' ஏத்தினாப் பிறகு கனன்று வரும் வீரம்.

"என்னைப் பெண்ணையன் என்டு நினைச்சிற்றாய் என்ன. வர்ர ஆத்திரத்துக்கு ஒரு அரை எடுத்து அடிச்சுப்போட்டு முச்சந்தியில நாலு பேருக்கு நடுவில இழுத்துப் போட்டு மிரிப்பன்".....நெற்றிக்குள் ஆத்திரம் புகைந்தது.

"மடையா, அவனைச் சொல்லிக் குற்றமில்லைடா. உன்னைச் சொல்லோனும். நீ குடிச்சுக் கூத்தாடிக் கொண்டு திரியிறாய். வேப்பமரம் எண்டாலும் வேலியில்லாம நிண்டா பிய்ச்சு மணக்கத்தான் செய்வாங்கள். பெஞ்சாதிக்கு வேலியா நிக்க வேண்டிய நீ விடியப்பறம் எண்டில்லாம ஏத்திக் கொண்டு திரிஞ்சா கட்டாக்காலி மாடு வேலி பாயத்தான் செய்யும்” தன்னையே திட்டிக் கொண்டான்.

"பட்டினி கிடந்தாலும் அயலட்டையில வாய் வைக்காம மரியாதையாக் குடும்பத்தை ஓட்டுற பொம்பிளை. எப்ப குடிக்கத் துவங்கினியோ அண்டைக்குப் பிடிச்ச சனியன். 'வெறுவாய்க்கலம்' கெட்ட குடியை விட்டுத் துலையடா."

பைல்களை கொண்டு வந்து ட்றேயில் போடும் போது பிரதம கிளாக்கர் நல்லதம்பி கேட்டார்: "என்ன நாதன், ஆரைத் திட்றாய்."

"ஒண்டுமில்லை சேர்.'

"சம்பள நாளல்லோ காய்ச்சல் வரத்தானே செய்யும். ஏன்ரா இப்பிடிக் குடிச்சு உருக்குலைஞ்சு போறாய். பிள்ளையை ஸ்கொலசிப் டியுசனுக்கு விடெண்டு சொன்னன். அருமையாப் படிக்கிற பொம்பிளைப்பிள்ளையை நாசமாக்காதை. மாசம் 50 ரூவாய் குடுக்க வக்கில்லாம தவறணையில் நக்கிக் கொண்டு திரியிறாய்."

நல்லதம்பி எப்போதுமே அவனிடம் தானாகவே உரிமை எடுத்துக் கொண்டு நாயே பேயே என்று பேசுகிறவர். அப்படிப் பேசினாலாவது திருந்த மாட்டானா என்ற ஆதங்கம். எவ்வளவு பேசினாலும் குனிந்த தலை நிமிராது. அந்த ஆசாடபூதி அடக்கம் அவருக்குப் பிடிப்பதில்லை.

“ஏன்ரா முண்டம் மாதிரி நிக்கிறாய், ரோச நரம்பில்லாத சாதி”. ஆத்திரத்தில் அளவு மீறியதை அடுத்த கணமே உணர்ந்து கொண்டார் நல்லதம்பி.

கள்
“டேய் நாதன், இண்டைக் கெண்டாலும் சம்பளத்தை அப்பிடியே கொண்டு போய் மனிசிர கையில குடு பாப்பம். கேவலம் கெட்ட குடியை மட்டும் கை கழுவீற்றியெண்டா ஒரு பிள்ளை உன்னைக் கையால பிடிக்கேலாது."

'ரோச நரம்பில்லாத சாதி' நறுக்குத் தெறிச்ச மாதிரி நெஞ்சுக்குள் வெட்டு விழுந்தது. இனி இந்தச் சனியனைத் தொடக் கூடாது. மனதிற்குள் சாராயக் கிளாசைத் தூக்கி எறிந்து உடைத்துத் தூள் தூளாக்கினான். சிதறிய சாராயத் துளிகளில் மேவிய மணம் குப்பெனப் படர்ந்தது.

வெறிநாயாக ஓடித் திரிந்த மனம் கட்டுக்கடங்கி சுருண்டு படுத்துக் கொண்டது. அன்று முழுக்க ஆரோடும் பேச்சில்லை. பிடிச்சு வைச்ச பிள்ளையார் மாதிரி கன்ரீனுக்குள் நாலைந்து பிளேன்ரியோடு கண் வெட்டாமல் நேரம் கழித்தான்.

நாலேகாலாயிற்று. சம்பள நாள் அவனுக்குச் சந்தோசந்தராத நாள். ஐந்து பத்தென்று கைமாற்றுக் கடன்களை சரிக்கட்டவே பத்தாத சம்பளம். அலுவலகம் அவசரமாய் காலியாக சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் நாதன்.

கடற்கரைப் பக்கமிருந்து காற்று வீச, வியர்த்திருந்த கழுத்து குளிர்ந்தது. பகல் முழுக்க விரவியிருந்த வெக்கை மெலிதாய் தணிந்து கொண்டு வந்தது. காலையிலிருந்து மனதை இறுக்கமாகக் கட்டியிருந்த முடிச்சு இளகி விரிவது போன்ற உணர்வு.

ஊரைச் சுற்றியோடும் அந்தக் கடற்கரை வீதியால் கடலைப் பார்த்துக் கொண்டே சைக்கிளில் செல்வது அவனுக்குப் பழகி விட்டது. அந்த வீதி முடியும் இடத்தில்தான் தவறணை.

பாதைக்கு இந்தப் பக்கமாக இருந்த தோட்டத்துப் பனைகளில் கட்டிய முட்டிகள் தெரிந்தன. சீவல் காலம்! முட்டிகளை நோக்கிப் படர்ந்த பார்வையை இழுத்துப் பறித்துக் கொண்டு சைக்கிளை மிரித்தான்.

தவறணையை அண்மிக்கும் போதே மனத்திற்குப் பழகிப் போன அந்த வாசம் வந்து உன்னைப்பிடி என்னைப் பிடியென்று இழுக்கும். ஒரு கால் அடிக்கும் எண்ணம் கால்களை இயல்பாகவே அழைத்துச் செல்லும். சபலவெள்ளத்தில் அகப்பட்டு அப்படி இழுபட்டுச் செல்வதே ஒரு இனம் புரியாத இன்பமாக இருக்கும்.

இருந்து குடிக்கும் வசதியற்ற, காற்று வராத, ஒரு பழைய சிற்றோட்டுக் கட்டிடம். நெஞ்சு வரை உயர்ந்திருக்கும் கவுண்டரில் கை பதித்து ஊன்றிக் கொண்டு கொஞ்சம் காத்து நிற்பதே ஒரு சுகம். பக்கமாய் தெரிந்த அல்லது தெரியாத ஒருவர் “அதிவிசேச” சரக்கை நின்ற நிலையிலேயே வாய்க்குள் கவிழ்த்துவிட்டு தொண்டையை செருமி வாய் துடைத்து நிமிர்வார்.

கள்
நாதன் நெற்றிப் புருவத்தை உயர்த்திக் காட்டுவான். சைகையிலேயே 'டபுள்' என்று புரிந்து கொள்வான் தவறணைக்காரன். சீல் சாராயப் போத்தலை றப்பர் தோலால் திருகி அவன் உடைக்க ஒரிஜினல் சரக்கென்று உள்ளம் பூரிக்கும். மஞ்சள் நிற மதுசாரத்தை சர்ர் என அவன் ஊற்றும் போது அடிக்கிளாஸ் நிரம்பி கழுத்து வரை நுரைப்பதைப் பார்த்து மனம் மயங்கும்.

கலக்காமல் அவனால் குடிக்க முடியாது. சோடா சேர்த்து அந்த நுரையின் மெலிதான இரைச்சலோடு கொஞ்சம் கொஞ்சமாய் தொண்டைக்குள் கவிழ்க்க வேண்டும். வயிறை எரித்து வல்லீசாய் அது இறங்க வேண்டும். இரத்தோட்டம் வேகமாகி நெற்றி நரம்பு புடைத்து மூக்கு வியர்க்க வேண்டும். அந்தக் கையோடு வாசலுக்கு வருவான். யாரையோ அடித்து வீழ்த்தி வெற்றி வாகை சூடிவிட்ட மாதிரி ஒரு வீரப் பார்வை வரும்.

அதற்குள் இருட்டி விடும். இரண்டு கிளாஸ் ஏற்றியபின் இருட்டென்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அகப்படுபவரோடு அரைகுறையில் ஆங்கிலம் கதைக்கச் சொல்லும். ரேஸ்ட்கடலை வண்டிக்காரன் லாம்பெண்ணை விளக்கின் புகை வெளிச்சத்தில் முன்னாலேயே நிற்பான். கொச்சிக்காயில் தாளித்துக் கலக்கி விட்ட கடலை கண்ணடிக்கும். அவித்துப் பொரித்த மரவள்ளித் துண்டைப் பிளந்து தூளிட்டு எலுமிச்சம் புளி விட்டு அவன் தருவதை ஒரு கடி கடித்தால் உள்ளே போன சாராயம் கொண்டா கொண்டா என்று கத்தும்.

ஒவ்வொருநாளும் மாலைப் பொழுதில் அவனை மயக்கும் அந்தத் தவறணை இப்போது கடந்து கொண்டிருந்தது. உள்ளே போய் ஒரு அரையை அசையாமல் இறக்கி விட்டு வாயைத் துடைத்துக் கொண்டு வெளிப்பட்ட ஒருவர் பக்கத்திலேயே மீன்காரனிடம் குந்தியிருந்து விலை கேட்டுக் கொண்டிருந்தார்.

அவனுள்ளே சுருண்டு இயக்கமின்றிப் படுத்திருந்த 'நாய்' சற்றே தலை நிமிர்த்திப் பார்த்தது. மெதுவாய் கட்டிலிருந்து கழன்று எழுந்து நின்று ஒரு தரம் உடலைச் சிலுப்பிற்று.

எந்த நாளுமா?

சம்பளத்தில் 50 ரூபாய்த் தாளை ரூபாய்த் தாளை பிரித்தெடுத்தான். காந்தத்தில் இழுபட்ட இரும்பாய் சைக்கிள் தானாகவே தவறணை நோக்கித் திரும்பியது.

தவறணை வாசலில் வந்த ஒருவன் தன்வயமில்லாமல் கதவோடு முட்டி விழுந்தான்.

"டேய் பத்து ரூவாக்கு நம்பாத சாதி. உன்னைப் போல சாராயத்தில தண்ணி கலக்கிற சாதியில்லடா நான். வாடா பாப்பம் வெளிய."

பிய்ந்து போன சட்டையிலிருந்து சில்லறைக் காசு கொட்டுப்பட்டுச் சிதறின. கலையோடு வந்தவன் தெள்ளு தமிழில் பன்னீர் தெளித்தான்.

"ஆர்ரா அது என்னை விழுத்தினது. ரோசங்கெட்ட வடுவா."

அவன் வாயிலிருந்து வழிந்த வீணியோடு கெட்ட வார்த்தைகள் சரமாரியாகக் கசிந்தன.

நாதன் நின்றான். உள்ளே கவுண்டருக்குப் பின்னால் நிமிர்ந்து நின்ற "அதிவிசேசங்கள்” அவனை அழைத்தன.

ரோச நரம்பில்லாத சாதி!

ஆயத்தமாய் கையில் வைத்திருந்த 50 ரூபாய்த் தாளை மடித்துப் பையில் வைத்தான். திரும்பிப் பாராமல் வீட்டை நோக்கி விரைந்தான்.

Post a Comment

Previous Post Next Post