பொறாமை

அலுவலகப் பியன்( Pеоn) என் அறைக்குள் வந்து' அவன்' வந்திருப்பதாகச் சொன்னான். பியனுக்கு பெயர் தெரிந்திருக்க நியாயமில்லை. உங்களிடம் வருகின்ற அந்தக் கறுத்தப் பொடியன் என்று மட்டும் சொன்னான். அனுப்பு என்று கூறி விட்டு நேரத்தைப் பார்த்தேன். பள்ளிக்குப் போகாமல் இந்த நேரத்தில் ஏன் இங்கே? போன வாரம் பொலிஸ் ரவுண்ட் அப்பில் அள்ளிக் கொண்டு போனவர்களில் அவனும் இருந்தான். விசரியாட்டம் நெஞ்சிலடித்துக் கொண்டு ஓடி வந்த தாயோடு பொலிசிற்குப் போய், அவன் எதிலும் சேர்த்தியில்லாத ஏழைப் பையன் எங்கள் தெருவில்தான் இருக்கிறான் என்று கஷ்டப்பட்டு நிறுவி விடுவித்தபின்- இப்போதுதான் வந்திருக்கிறான். 
 
 
பொறாமை
பெயர் பிரபாகரன்! சிவபெருமானின் மறுபெயர். இந்தப் பெயரை வைத்தால் பிள்ளை நல்லாயிருப்பான் என்ற நம்பிக்கையில் தகப்பன் வைத்திருப்பான். பின்னுக்கு இத்தனை பிசகு வரும் என்று அவனுக்கு எப்படித் தெரியும்! இந்தப் பெயரைக் கேட்டாலே' அவர்களுக்கு' அலர்ஜி. உனக்குச் சொந்தமா பந்தமா என்று கேட்டு பையனைக் குதறி எடுத்து விட்டார்கள். 
 
" சேர்". அவன் உள்ளே வந்தான். அழுவதற்கு ஆயத்தமாக வந்தது போலிருந்தது. 
 
 “ என்ன பிரபு இந்த நேரத்தில. பள்ளிக்குப் போகேல்லையா?" 
 
" அங்க இருந்துதான் நேர வாறன் சேர்". வழிந்த கண்ணீரை மறைக்கக் குனிந்தான். 
 
 “ என்ன தம்பி ஏன்அழுகிறாய்.சொல்லன்". எனக்கு நெஞ்சிடித்தது. திரும்பவும் ஏதும் பிரச்னையில் மாட்டிக்கொண்டானோ! 
 
" ஏலெவல் ரிசல்ட் வந்திற்றுது சேர்." 
 
" வந்திற்றுதா என்ன ரிசல்ட். ” 
 
" 3ஏபி." 
 
 நான் எழுந்து போய் அவன் தலையைக் கோதி விட்டேன். எனக்குத் தெரியும் இந்த ஏழைப் பிள்ளை எப்படியும் இதனைச் சாதித்து விடும் என்று. இன்னும் ஐந்து வருடங்களில் டாக்டராக வெளியே வந்து விடும். அந்தக் குடும்பத்தைப் பிடித்த கஷ்டங்களை நீக்கி தானும் எல்லோரையும் போல வாழப் பிறந்தவன்தான் என்பதை நிரூபிக்கும். என் தொண்டை கம்மிற்று. 
 
" அம்மா என்ன சொல்லுறா? ” 
 
" இனித்தான் சேர் போய்ச் சொல்ல வேனும் ”. அவனது பெருந்தன்மை என்னை மயக்கியது. 
 
" சரி சரி ஓடு, முதல்ல வீட்டை போய்ச் சொல்லு. அதுகள் பாத்துக் கொண்டிருக்கப் போகுது." 
 
" ஓம் சேர்." 
 
 சொன்னானே தவிர இடத்தை விட்டு அசையவில்லை. வழிந்த கண்ணீரை அவனால் நிறுத்த முடியவில்லை. எனக்குள் சந்தோசச் சங்கடம். ரிசல்ட் வந்த செய்தியை முதலில் தாய்க்குக் கூடச் சொல்லாமல் என்னிடம் வந்திருக்கிறான். அப்படிப் பெரிதாக நான் என்ன செய்து விட்டேன். தகப்பனை இழந்த படிக்க ஆர்வமுள்ள ஏழைப்பிள்ளைக்கு மனுசத்தன்மையுள்ள எவரும் செய்யக்கூடியதுதானே. 
 
"ம்.நீ நின்டு மினக்கெடாதை, அம்மாட்டைப் போய்ச் சொல்லு எப்பிடி வந்தனி? ” 
 
" சைக்கிளில." 
 
" எங்கட வீட்டில ஒருக்கா எட்டி சாரதாட்டை விசயத்தைச்சொல்லு.பின்னேரம் வீட்டுக்கு வந்திரு என்ன. ” 
 
 ஒருவிதமாக நகர்ந்தான். உண்மையில் இவனை சாரதாவிற்குத்தான் இவனில் மிகவும் ஒட்டுதல். இவனை முதன் முதலாக நாங்கள் சந்தித்தது- பக்கத்து ரவி மாஸ்டர் வீட்டிற்கு கடையப்பம் கொண்டு வந்த போது தான். கட்டிக் கறுப்பு. கறுப்பையும் மீறிய சாங்கமான முகம். தடிக்கு சட்டையணிவித்தது போன்ற மெலிவு. கட்டைக் கால் சட்டை, அறுந்து போன ஒரு றபர் செருப்பிற்கு பூட்டுசி போட்டிருந்தான். சாமான் என்று மூடல் பெட்டியோடு வந்தவனிடம் என்ன கேட்டேன். தோசை இடியப்பம் சேர்( Sir) என்றான். இந்த வயசில் வீடுவீடாய் கடையப்பம் விற்கிற பொடியன்களை இந்த நாட்களில் நான் கண்டதில்லை. அவனது மென்மைக் குரலில் ஈர்ப்பு ஏற்பட, இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே கொஞ்சம் கதைப்போம் என்ற எண்ணம் வந்தது. 
 
" வீடெங்க தம்பி?" 
 
 “ சந்தியில. லைட் போஸ்ட்டுக்குப் பக்கத்தில" 
 
" இந்த றோட்டிலயா. நான் காணேல்லையே". நீங்க காணாததுக்கு நான் என்ன செய்யிறது என்பது போல மெலிதாகச் சிரித்தான். 
 
" என்ன படிக்கிறாய?" 
 
"ஏலெவல்.இந்த முறை சோதனை எடுக்கிறன் சேர்". சொல்லும் போது “ பரீட்சைப்பயம் ” அவன் முகத்தில் தெரியவில்லை. அவன் புறப்பட்டான். 
 
" கொஞ்சம் பொறு தம்பி, எங்களுக்கும் தோசை வேனுமா எண்டு கேட்டுச் சொல்றன்." 
 
 உள்ளே வேலையாயிருந்த சாரதாவைக் கூப்பிட பக்கத்து வீட்டு ரவி மாஸ்டர் பெஞ்சாதி ரோகிணி வாசலுக்கு வந்தாள். எங்கள் இரு வீடுகளையும் பிரிப்பது ஒரு சுவர்தான். இந்தப் பக்கத்தில் கதைப்பது அந்தப் பக்கமும் கேட்கும். 
 
" தோசையா சின்னந்தான். பச்சடி பரவாயில்லை. வேனும் எண்டு அக்கா கேட்டிருந்தா முந்தியேசொல்லியிருப்பனே.இவரிட்ட படிக்கிற பொடியன்தான்". வழமை போல கேட்காமலே தனது அபிப்பிராயத்தை அள்ளி வழங்கினா பக்கத்து வீட்டு ரோகிணி. 
 
 அன்றுதான் முதன் முதலாக பிரபாகரனிடம் தோசை வாங்கினோம். தோசை பிள்ளைகளுக்கும் பிடித்துப்போக அவன் தொடர்ந்து வீட்டுப் பக்கம் வரத் தொடங்கினான். 
 
 ஒரு மந்தமான மாலை வேளையில் வழியால் போன பிள்ளையைக் கூப்பிட்டு பக்கத்தில் இருக்கச் சொல்லி அப்பா என்ன செய்யிறார் என்று கேட்டேன். அப்பா இல்லை சேர் என்றான். தகப்பன் இருந்திருந்தால் இந்த வயதில் கடையப்பம் விற்கவிட்டிருப்பானா.மடையன் மாதிரி கேள்வி கேட்டிருக்கக்கூடாது. 
 
 “ எப்ப ” 
 
" எனக்கு இரண்டு வயசில.' 
 
" வீட்டில அம்மா மட்டுமா." 
 
" இல்லை சேர் ரெண்டு அக்காவும் ஒரு தங்கச்சியும்." 
 
 சாரதா என்னை உள்ளிருந்து கூப்பிட்டாள். உங்களுக்கு அந்தப் அளவில்லாத சட்டையள் நிறையக் கிடக்குது. பிள்ளைக்கு அளவானதைக் குடுத்து விடுங்கோ என்றாள். 
 
 
பொறாமை
இப்படி எங்கள் தொடர்பு அவனோடு நெருக்கமாயிற்று. இன்னொரு நாள் அலுவலகம் போன வழியில் அவனது வீட்டிற்கு முன்னால் ஆளைக் கண்டேன். அந்தத் தெருவில் மின்சாரம் இல்லாத வீடு அதுவாகத்தான் இருக்கும். வீடு என்று சொல்வது கூட அதிகம்தான். ஓலைக்கொட்டில் வாசலில் மோட்டர் சைக்கிள் நின்றதைக் கண்டதும் தாயும் மூன்று குமர்ப்பிள்ளைகளும் என்னவோ ஏதோ என்று தெருவிற்கு வந்தார்கள். அந்த முகங்களில் நிறைய புன்னகை இருந்தது. பொன் நகையை மருந்துக்கும் காணோம். 

 ஒரு நாள் சைக்கிளில் வீட்டிற்கு வந்த அவனிடம் பக்கத்து வீட்டு ரோகிணி கேட்டா. 
 
 “ கடையப்பம் வித்து சைக்கிள் வாங்கிற்றாய் போல கிடக்கு. ” 
 
 “ இல்லை அக்கா சேர்தான் ஓடச் சொல்லி தந்தவர். ” ஆ. என்றா ரோகிணி. அவவின் பத்து வயது மகன் கஜன் வந்து தாய்க்குப் பக்கத்தில் நின்றான். அவன் படிக்கிற எப்போதும் வகுப்பில் முதலாம் பிள்ளை. படுசுட்டி.படிக்கிற நேரத்தில் படிப்பான். விளையாடுகிற நேரத்தில் விளையாடுவான். எதிர்காலத்தில் ஒரு ஆல் ரவுண்டராக வரக்கூடிய அறிகுறிகள் இப்போதே தெரிந்தன. நல்ல அடக்கமான பிள்ளை. இந்த வயதிலேயே அங்கிள் அங்கிள் என்று என்னிடம் வந்து வாசிக்க கதைப் புத்தகங்கள் கேட்பான். 
 
 ரோகிணி கேட்டா." பிரபா ஏலெவல் எக்சாம் இந்த முறை எடுக்கிறியா?" 
 
" ஓம் அக்கா." 
 
" டியுசன் போறியா?" 
 
" ஓம்அக்கா.சேர் தான் சேர்த்து விட்டவர்." என்னை ஒரு விதமாகப் பார்த்தா ரோகிணி. 
 
" அம்மா கடையப்பம் சுட்டுக் கஷ்டப் படுறா நல்லாப் படி என்ன எத்தினாம் பிள்ளை வகுப்பில.'' 
 
" எங்களுக்குப் பிள்ளை போடுறேல்லையக்கா." 
 
" கஜன் இந்த முறையும் முதலாம் பிள்ளை தெரியுமோ.'' 
 
 தன் மகன் தொடர்ந்து முதலாம் பிள்ளையென்று அகப்பட்டவரிடம் சொல்லாவிட்டால் ரோகிணிக்கு உணவு செல்லாது. எல்லாத் தாய்மாருக்கும் இருக்கக்கூடிய நியாயமான பெருமைதான். 
 
 அலுவலக பைல்களைத் தட்டுகையில் அந்தப் பிள்ளையே மனதில் வந்து கொண்டிருந்தான். எங்கள் பிள்ளைகள் இப்ப நடக்கிற சுற்று வளைப்புகளுக்குத் தப்பிப் பிழைச்சு படிச்சு முடிக்கிறதே பெரிய காரியம். 
 
 ரவுனில்( Tоwn) பெரிய பள்ளிக்கூடங்களுக்கு ரெலிபோன் செய்து ரிசல்ட் எப்படி என்று கேட்டேன். இந்த முறை எங்கள் ஊருக்கு 3 டாக்டர் 4 எஞ்ஜினியர் 5 மனேஜ்மண்ட் தேறுவார்கள் போல் தெரிந்தது. திறம் ரிசல்ட் பிரபாகரனுக்குத்தான். 
 
 பசிக்கத் தொடங்க வீட்டிற்குப் புறப்பட்டேன். வழியில் சில இடங்களில் ரிசல்ட் காய்ச்சலில் அடிபட்ட மாணவர்கள் கூட்டம் கூட்டமாய் அலைந்ததைக் காண முடிந்தது. வீட்டிற்குப் போனதும் சாரதாவிடம் கேட்டேன். 
 
" கேள்விப்பட்டியாம்மா?" 
 
 ஓம். பாவம் தகப்பன் இல்லாத பிள்ளை. இதோட அதுகளின்ர கஷ்டம் தீர்ந்து போயிரும் என்றாள் சாரதா. 
 
 பக்கத்து வீடு ரோகிணி வீட்டில் கஜன் பெரிதாக அழுத சப்தம் கேட்டது. 
 
 “ ஏன் கஜன் கத்துறான்?" 
 
" தாய் சரியா அடிச்சுப் போட்டா." 
 
 ஏன் என்று கேட்க, சாரதா மெளனமாக இருந்தாள். 
 
 சாறனை மாற்றிக் கொண்டு பின்பக்கம் போன போது ரோகிணியின் சப்தம் காதில் விழுந்தது. 
 
" கடையப்பம் வித்ததுகள் டொக்டராகப் போகுதுகள். உனக்கு எந்த நேரமும் விளையாட்டு என்ன. நாலு மாதத்தில் ஸ்கொலசிப் சோதனைவருகுது.அப்பா அவர்ரபாடு.தன்ர பிள்ளையைக் கவனிக்க நேரமில்லை 
 ஊர் பிள்ளையளோடு மாரடிக்கிறார். நீ பட்டம் ஏத்திக் கொண்டு திரியிறாய். வாடா இங்க. ” 
 
 நேற்று வரைக்கும் தன் பிள்ளையைப் புழுகித் தலையில் தூக்கிக் கொண்டு திரிந்தவவுக்கு திடீரென என்ன நேர்ந்தது! 
 
 " சாரதா, என்ன நடந்தது பிள்ளையை இப்பிடிப் போட்டு அடிக்கிறா?"
 
" பிரபு வந்து தன்ர ரிசல்ட்டைச் சொல்லீற்றுப் போனான். அந்தக் கையோட துவங்கினது இன்னம் நிக்கேல்லை. ” 
 
" டேய் கஜன் இங்க வா." 
 
 தாய் கூப்பிட, மீண்டும் அடிவிழும் என்ற பயத்தில் பின் வாசலுக்கு ஓடி வந்து வாழை மரத்தின் பின்னால் ஒளிந்தது பிள்ளை. அவனைக் கனிவோடு பார்த்தேன். 
 
 தோசை கொண்டு வருகிற அண்ணன் ஏலெவல் பாஸ் பண்ணிய விசயத்தைச் சொல்லி விட்டுப் போன கையோடு தனக்கு ஏன் துரத்தித் துரத்தி அடி விழுகிறது என்ற நியாயம் விளங்காமல் விழித்துக் கொண்டிருந்தான் ஐந்தாம் வகுப்பில் முதலாம் பிள்ளையாக வந்த கஜன்.

Post a Comment

Previous Post Next Post