The Story of Amazon.com

முழுக்க முழுக்க டிஜிடல் மயமாக மாறியுள்ள இன்றைய உலகில் கையடக்கத் தொலைபேசி மூலம் பல அதிசயங்களை மனிதர்கள் நிகழ்த்துகின்றனர். மனிதர்களின் இந்த மின்னல் வேக வாழ்க்கைகேற்ப மேலும் பல கண்டு பிடிப்புகழும் உருவாகிக்கொண்டேதான் வருகின்றது. அந்த வகையில் 90களின் ஆரம்பகால கட்டத்தில் பிரபலமான இணையதள சேவையும் அதை சார்ந்து உருவாக்கப்பட்ட அமேசான் நிறுவனமும் இன்று மனிதர்களின் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையில்லை. இந்த அவசர யுகத்தில் மனிதர்களின் தேவையை அறிந்து , நொடிப்பொழுதில் சேவையை வழங்கும் அமேசான், இன்று உலகின் நம்பர் 1 இணையவர்த்தகமாக மாறியுள்ளது. அமேசானின் ஆரம்பம், அமேசான் எதிர்கொண்ட சவால்கள், அந்த சவால்களை தவிடுபொடியாக்கி உச்சம் தொட்டமை, மக்கள் மனதில் செல்வாக்கான நிறுவனமாக திகழ்வது உள்ளிட்டவற்றை இன்று நாம் பார்க்கலாம்.


1964ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூமெக்ஸிகோவில் பிறந்தவர் ஜெப் பெஸோஸ் (Jeff Bezos) இவரது நான்காவது வயதில், இவரது தந்தையிடமிருந்து விவாகரத்து பெற்ற தாய் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார் . தனது வளர்ப்புத் தந்தை ஓர் மின் பொறியியலாளராக இருந்ததால், சிறுவயதுமுதல் Jeff தொழில்நுட்பம் குறித்து அதிகம் ஆர்வமுடையவராக இருந்தார். 1986இல் மின் பொறியியல் மற்றும் கணினி துறையில் பட்டம் பெற்ற Jeff கணினி தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு நிறுவனங்களுள் பணிபுரியத் தொடங்கினார். இந்த காலகட்டத்தில் கணினித்துறையின் அசுர வளர்ச்சி தொழில் துறையில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது. இதனால் உலக வர்த்தக தலைநகரான வோல் ஸ்ட்ரீட்டில் (wall street)உள்ள தொழில் நிறுவனங்களுக்கு கணினி அறிவுடையவர்கள் தேவைப்பட்டனர். சந்தைப்படுத்தல் மாற்றங்கள் பற்றி துல்லியமாக அறிந்து கொள்ள கணினியறிவே பெரிதும் வரவேற்புப் பெற்றது. இந்நிலையிலேயே Jeff வோல் ஸ்ட்ரீட்டில் உள்ள நிறுவனமொன்றில் பணியாற்ற தொடங்கினார். Jeffக்கு வர்த்தகம் பற்றிய பல நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தது வோல் ஸ்ட்ரீட்! மக்களிடம் ஒரு பொருளை எப்படி விற்பனை செய்வது? மக்களின் தேவையை அறிந்து சேவையை எவ்வாறு வழங்குவது? ஒரு நிறுவனத்தை எப்படி வெற்றிகரமாக நடத்தி செல்வது போன்ற தொழில்துறை சார்ந்த பாடங்களை அங்குதான் Jeff கற்றுக் கொண்டார். இந்தசமயத்தில்தான் (90 களின் ஆரம்பகால பகுதியில்) இணையதள புரட்சி அமெரிக்காவை ஆட்டிப்படைக்க தொடங் கியது. இணையசேவையை பயன்படுத்தும் மக்களின் தொகை வெகுவாக அதிகரித்தது. இதனை கவனித்த Jeff இணையசேவை பயன்கள் பற்றி ஆய்வு செய்ய தொடங்கினார். அப்போதுதான் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. வாடிக்கையாளர்க்கும் விற்பனையாளருக்கும் ஓர் எளிய மற்றும் சிறந்த பாலமாக இணையத்தளத்தினை அமைக்க முடியும் என நம்பினார். தனது யோசனையை நண்பர்களிடமும் அலுவலக சகாக்களிடமும் சொன்னபோது அனைவரும் அதை கேட்டு சிரித்தனர். ஆனால், இந்த யோசனைதான் வர்த்தக உலகினையே மாற்றப்போகும் விஷயம் என்பதை Jeff உறுதியாய் நம்பி கடுமையாக உழைக்கத் தொடங்கினார்.


இதற்கிடையில் வோல் ஸ்ட்ரீட்டில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது உடன் பணியாற்றிய MacKenzie Scott என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் Jeff. உண்மையில் அமேசான் நிறுவனம் உருவாக MacKenzie Scott மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்துள்ளார். "இணையம் மூலம் மக்களுக்கு பொருட்களை விற்கும் திட்டமெல்லாம் வேலைக்கு ஆகாது, பொருட்களை நேரடியாக பார்த்து வாங்குவதில்தான் மக்களுக்கு ஆர்வமிருக்கிறது'' எனவே இந்த திட்டத்தினை கைவிட்டுவிடு என பலரும் அறிவுரை வழங்கியபோது, Jeffற்கு இந்த திட்டம் நிச்சயம் வெற்றிபெறும் என, நம்பிக்கையும் உற்சாகமும் அளித்தவர் MacKenzie Scott மட்டுமே.

மக்களுக்கு இணையம் மூலம் பொருட்களை விற்க வேண்டுமெனில் பிராண்டிங் மிகமிக அவசியம் என்பதை Jeff புரிந்துகொண்டார். அப்போதுதான் உலகிலேயே மிகப்பெரிய நதிகளில் ஒன்றான அமேசான் அவரது நினைவுக்கு வந்தது. அமேசான் நதியைப் போன்று தனது நிறுவனமும் மிகப்பெரியது என்பதை உணர்த்தும் விதமாக தனது நிறுவனத்துக்கு அமேசான் என பெயரிட்டார் . அதேபோல் தனது இணையதள நிறுவனத்தில் அனைத்தும் பொருட்களும் கிடைக்கும் என்பதை உணர்த்தும் விதமாக அமேசான் என்ற சொற்றொடரின் ஆங்கில எழுத்தான “A”யிலிருந்து “Z' வரை அம்புகுறியிட்டு லோகோ (log-0)வடிவமைக்கப்பட்டது . மேலும் , அமேசானில் மக்கள் மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் பொருட்களை வாங்கலாம் என்பதை குறிக்கும் முகமாக அதன் லோகோவிலிருக்கும் அம்புக்குறி லேசாக வளைக்கப்பட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டது. அமேசான் நிறுவனத்திற்கு தொழில்நுட்பம் மிகமிக அவசியம் என உணர்ந்து கொண்ட Jeff தொழில்நுற்பதின் தலைநகரான அமெரிக்காவின் சியாட்டில் (Seattle) நோக்கி பயணமானார். எனினும் அமேசானில் நம்பிக்கை வைத்து அதில் பணிபுரிய அப்போது யாருமே முன்வரவில்லை . ஆனாலும் அமேசானுக்கு ஓர் புதிய இணையதள பக்கத்தினை உருவாக்கவும், அதில் மக்கள் மிக எளிமையான முறையில் பொருட்களை வாங்கவும், கணினி மென் பொருட்களை அத்துப்படியாக அறிந்த ஒருவர் Jeffக்கு தேவைப்பட்டார். அந்த சமயத்தில்தான் Shelkaphan அறிமுகமானார். அமேசானின் அதிகாரபூர்வமான முதல் உத்தியோகத்தர் இவரே.


எல்லாம் சரி, அமேசான் மூலம் முதலில் எந்த பொருளை விற்பது? நீண்டநாள் யோசனைக்குப்பின் புத்தகங்களை விற்பனை செய்வது என Jeff முடிவெடுத்தார். அமெரிக்க மக்கள் புத்தகங்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் புத்தகங்களை விற்கும் முடிவு எடுக்கப்பட்டது . வாசிக்கும் பழக்கம் அமெரிக்கர்களிடம் அதிகமிருந்தாலும் அவர்களுக்கும் தேவையான புத்தகங்கள் எளிதில் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருந்தன. புத்தக கடைக்கு சென்று, அங்குள்ள அலுமாரிகளில் அடுக்கப்பட்டிருக்கும் புத்தக குவியல்களுக்கிடையே கால் வலிக்க நின்று தமக்கு தேவையான புத்தகங்களை தேடி எடுக்க வேண்டும். அப்படித் தேடினாலும் தேவையான புத்தகங்கள் சில சமயங்களில் கிடைப்பதில்லை என்ற விடயம் Jeffன் கவனத்துக்கு எட்டியது இதுதான் தனக்கு கிடைத்த சரியான வாய்ப்பு என புரிந்து கொண்ட Jeff அமேசானில் எளிய முறையில் அனைத்து புத்தகங்களும் கிடைக்கும் என அறிவித்தார். அதுவும் நீங்கள் ஆர்டர் செய்யும் புத்தகங்கள் உங்கள் வீட்டுக்கே கொண்டுவந்து தரப்படும் என விளம்பரப்படுத்தினார். சியாட்டல் நகரில் உள்ள ஓர் சிறிய வீட்டில் மிகவும் குறைந்த அளவிலான முதலீட்டில் அமேசான் நிறுவனம் உருவாகியது. படிப்படியாக அமெரிக்கர்களின் நம்பிக்கையை வென்று தொடங்கிய முப்பதே நாட்களில் அமெரிக்கா மட்டுமன்றி நாற்பத்தைந்து நாடுகளில் தமது விற்பனை சேவையில் பிரபலமானது. மாறிவரும் உலக பொருளாதாரம் இணையதளம் சார்ந்ததாகவே இனி இருக்கபோகின்றது என்பதை புரிந்துகொண்ட முதலீட்டாளர்கள் அமேசானில் முதலீடுகளை செய்ய முன்வந்தனர் . இரண்டு ஆண்டுகளில் பல பிரபலமான புத்தக விற்பனை நிலையங்களை பின்னுக்குத்தள்ளி புத்தக விற்பனையில் தனிசாம்பிராஜ்யம் அமைத்தது அமேசான் . அமேசானின் வளர்ச்சி பல புத்தக விற்பனையாளர்களையும் பதிப்பாளர்களையும் நேரடியாக பாதித்தது . மேலும் அமேசானுக்கென ஓர் புதிய சந்தையை உருவாக்கி விட்டால் அதற்குபிறகு லாபத்தை பார்க்கலாம் என்ற நீண்ட கால திட்டத்தை போட்டு வைத்த Jeff, முதலில் மக்களை தம் பக்கம் இழுக்க வேண்டும் என்பதை குறிக்கோளாய் கொண்டிருந்தார். Jeffஇன் இந்த திட்டம் புத்தக விற்பனையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. கடைகளைவிட மிக மலிவான விலையில் புத்தகங்களை விற்பதன்மூலம் புத்தக விற்பனையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த Jeff அடுத்தடுத்ததளங்களிலில் கால் பதிக்க நினைத்து 2002 ஆம் ஆண்டு துணி விற்பனையில் களமிறங்கினார். அதுபோலவே வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அமேசானில் விற்பனைக்கு விடப்பட்டது.

அமேசானில் விற்கப்படும் பொருட்கள் சில்லறை வியாபாரிகளிடம் மொத்தமாக கொள்வனவு செய்யப்பட்டது. புத்தக விலையைப் போன்றே மற்றைய பொருட்களும் மிகமிக குறைவான விலையிலேயே விற்கப்பட்டது. இதனால் சில்லறை வியாபாரிகள் முதலில் லாபம் கண்டாலும், பின்னர் அதுவே ஆபத்தானது. சில்லறை வியாபாரிகளிடம் பொருட்களை அடிமாட்டு விலைக்கு அமேசான் நிறுவனம் கேட்டது, விற்பனையாளர்க்கு இது கட்டுப்படியாகவில்லை . இதனால் நேரடியாக உற்பத்தியாளரிடமே சென்ற அமேசான் மிக மலிவான விலையில் பொருட்களை வாங்கி விற்கத்தொடங்கியது. இதனால் சில்லறை வியாபாரிகளின் வாய்ப்பு மிகவும் குறையத் தொடங்கியது. அமேசானுக்கு மக்கள் பழக்கப்பட்டு விட்டதால் அதில் பொருட்களை வாங்கினால் லாபம் என நினைக்க , இதனால் சில்லறை விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அமேசானுக்கு மக்களை பழக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக சில உளவியல் தந்திரங்களையும் மிக சூட்சுமமாக பயன்படுத்தினார். ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதன் ஊழியர்கள் மிக முக்கியமானவர்கள் என புரிந்து கொண்ட Jeff ஆரம்பகால கட்டத்தில் ஊழியர்களை தானே தேர்ந்தெடுத்தார் . அதேநேரம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை சார்ந்ததுதான் அமேசானின் வெற்றி என்பதை கருத்திற்கொண்டு எப்போதுமே அவர் வாடிக்கையாளர்களின் நலன் சார்ந்தே செயற்பட்டார்.


அமேசான் அடுத்ததடுத்ததாக Echo , Fire tablet, Fire TV, Fire OS Kindle போன்ற தயாரிப்புகளையும் , சேவைகளான amazon.com,amazon Alexa, Amazon Music, Amazon Prime, Amazon Prime Video, Amazon Web Services போன்றவற்றை சந்தையில் அறிமுகப்படுத்தினர். எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை E புத்தகமாக வெளியிட வழி செய்து அதற்கான royaltyயை கொடுத்தனர். இப்படியாக தினம்தோறும் அறிவிக்கப்பட்ட புதுப்புது திட்டங்கள் அமேசானை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி சென்றது.

இணைய வர்த்தக சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னனாக திகழும் Jeff, 2018ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 840,000 ஊழியர்களையும், வருடவருமானமாக 280,522 பில்லியன் அமெரிக்கா டொலர் மற்றும் மொத்த சொத்து மதிப்பாக 225,248 பில்லியன் அமெரிக்கா டொலர்களையும் உடையவராக உலகின் முதல் பணக்காரராக உச்சம் தொட்டு இன்று வரை நீடித்து வருகின்றார்.

Post a Comment

Previous Post Next Post