History of Vasanth & Co

தமிழகத்தில் பெரும்பாலான பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் ஒலிக்கும் பாடல் Vasanth & Co நிறுவனத்தின் விளம்பரப் பாடல்கள்தான் என்றால் அது மிகையில்லை ! டிவி. மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்கள் என்றாலே அது பணக்காரர்களுக்கு மட்டும் என்கிற நிலையை மாற்றி நடுத்தர வர்க்க மக்களும் அவற்றை அனுபவிக்கும் நிலையினை உருவாக்கியவர் , வீட்டு உபயோகப் பொருட்களை நடுத்தர மக்களின் இல்லங்களுக்கு கொண்டுபோய் சேர்த்த பெருமையைக்கொண்ட நிறுவனத்தின் சொந்தக்காரர், ஹரிகிருஷ்ணன் வசந்தகுமார்! இன்று சுமார் 84 கிளைகளோடு இயங்கிவரும் Vasanth & Coவின் வளர்ச்சியென்பது அவ்வளவு எளிதானதன்று. சுதந்திர இந்தியாவில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து ஓர் வியாபார சாம்ராஜ்யத்தினையே கட்டியெழுப்பியுள்ள வசந்தகுமார் தொழிலதிபர், அரசியல்வாதி, தொலைக்காட்சி சேனல் உரிமையாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

History of Vasanth & Co
தன்னம்பிக்கை கடின உழைப்பு இரண்டும்தான் வெற்றிக்கான சூத்திரம் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை. வியாபாரத்தில் கொடிகட்டி பறக்க நினைக்கும் அத்தனைபேரும் நகரங்களை குறிவைத்தே தமது வியாபாரங்களை கட்டமைப்பர். ஆனால், கிராமங்களை குறிவைத்து தன் வியாபாரத்தை கட்டியெழுப்பி அதில் வெற்றியும் கண்டவர் வசந்தகுமார். 1950 ஏப்ரல் 14 கன்னியாகுமரி மாவட்டத்தின் அகத்தீஸ்வரத்தில்பிறந்த இவரது மூத்த அண்ணன்தான் காங்கிரஸின் மூத்த அரசியல்வாதியான குமரி ஆனந்தன் (இன்றைய தெலுங்கானா ஆளுநர், தமிழிசையின் அப்பா ) 1971ஆம் ஆண்டு சென்னை வந்திறங்கிய வசந்தகுமாரை V. G. பன்னீர்செல்வம் எனப்படும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துவிடுகின்றார் குமரி ஆனந்தன்.

மாதம் எழுபது ரூபாய் சம்பளத்தில் விற்பனையாளராக இணைந்து கொண்ட வசந்தகுமார் கடின உழைப்பு மற்றும் வியாபார நுணுக்கங்களை எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் போன்றவற்றால் அடுத்தடுத்து பதவி உயர்வுகளை பெற்றுக்கொள்கின்றார். ஏழு வருடங்களில் முன்னூறு ரூபாய் சம்பளத்துடன் கிளை மேலாளராக பதவியுயர்வு அடைகின்றார். எனினும் வாழ்க்கை எப்போதுமே ஒரே சீராய் செல்வதில்லையல்லவா? அலுவலக சகா ஒருவருடன் வசந்தகுமாருக்கு நடுரோட்டில் ஏற்பட்ட அரசியல் வாய்க்கலகலப்பினால் போலீசாரால் கைதுசெய்யப்பட , இந்த நிகழ்வை ஒட்டி மும்பை கிளை மேலாளராக இடமாற்றம் கொடுக்கப்படுகின்றது .

எனினும் மொழி தெரியாத ஊருக்கு செல்வதைவிட வேலையை விட்டுவிடுவதென முடிவெடுகின்றார் வசந்தகுமார் . பல இன்னல்களுக்குப்பின் சொந்த நிறுவனம் தொடங்குவது என முடிவெடுத்தாலும் கையில் சுத்தமாக காசில்லை . அப்போதுதான் தெரிந்த ஒருவர் வியாபாரதில் தோல்வியுற்றால்  ஆறு மாதத்தில் எட்டாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்கிற நிபந்தனையுடன் அவரது பூட்டிக்கிடந்த ஒரு கடையை வசந்தகுமாருக்கு கொடுத்தார். நண்பர் ஒருவர் கொடுத்த சொற்ப கடனில் 1978 இல் சென்னை உஸ்மான் சாலையில் உருவானது முதலாவது Vasanth & Co. முதலில் மளிகை கடையாக இருந்த தனது நிறுவனத்தை நாளடைவில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்கும் நிறுவனமாக மாற்றினார். வெற்றிபெற்ற நிறுவனங்களின் வழக்கமான நகர்ப்புறம் என்கிற பார்முலாவை தவிர்த்து நேர்மாறாக கிராமப்புறங்களை குறிவைத்தார். அன்று ஆடம்பர செலவுகள் என மக்களால் எண்ணப்பட்ட அத்தனை பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களாக மாற்ற முடிவெடுத்தார்.

இன்றுவரை 60% பொருட்களை ஊரக பகுதிகளிலும், 40% பொருட்களை நகரங்களிலும் Vasanth & Co விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. நம் வீட்டில் டீவியா? நம் வீட்டில் மிக்சியா ? நம் வீட்டில் கிரைண்டரா ? என எண்ணிக்கொண்டிருந்த நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் நீங்களும் எளிதாக வாங்கக்கூடிய பொருட்கள்தான் இவை என்பதை உணரவைத்தார் வசந்தகுமார். எங்கெல்லாம் நடுத்தர வர்க்கம் நிறைந்திருக்கின்றதோ, அங்கெல்லாம் களத்தில் இறங்கி சீட்டு , தவணைக்கொடுப்பனவு போன்ற திட்டங்கள் மூலம் அவர்கள் விரும்பும் பொருட்களை விற்பனை செய்வதே அவரது வணிகக்கோட்பாடு தவணைக்கொடுப்பனவு உத்தியே அவரது வெற்றிக்கான முதல்படி பொருளை விற்கும்முன் அதற்கான விலையில் பாதியை பெற்றுக்கொண்டு மீதியை ஆறு மாத தவணை முறையில் பெற்றுக்கொள்ளும் இந்த முறைமை ஒன்றும் வசந்தகுமாருக்கு புதிதல்ல .

தன்னை வளர்த்த நிறுவனத்தில் கற்றுக்கொண்ட வித்தைகளை தன் சொந்த நிறுவனத்தில் செயற்படுத்த ஆரம்பித்தார். பணிபுரிந்தபோது அறிமுகமான பழைய நண்பர்கள் வாடிக்கையாளர்கள் என யாரையும் விடவில்லை வசந்தகுமார் . அனைவரையும் நேரில் சென்று சந்தித்து தன் கடையுடன் தொடர்புகளை பேனும் வண்ணம் வழியமைத்துக்கொண்டார். 1985ஆம் ஆண்டுக்குப்பின் Vasanth & Coவின் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது .
அவ்வாண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டியானது இந்தியாவில் தொலைக்காட்சிப் பெட்டியின் முக்கியத்துவத்தினை அதிகரித்தது . பத்து தங்கப்பதக்கங்களை பெற்று இந்தியா இரண்டாம் இடத்தினை பிடிக்க , இந்தப்போட்டியில்தான் இந்தியாவின் தங்க மங்கை எனப்படும் பி.டி உஷா நான்கு தங்ககளை பெற்று அசத்தியிருந்தார் .

இந்த போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியின் தாக்கம் தொலைக்காட்சிப் பெட்டியின் விற்பனையிலும் எதிரொலித்தது. பெரும்பாலான நிறுவனங்கள் இந்திய இல்லங்களுக்குள் தமது தொலைக்காட்சி பெட்டிகளை தங்களது வியாபார உத்திகள் மூலம் திணிக்க துடித்துக்கொண்டிருந்தன . இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள நினைத்த வசந்தகுமார் அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்துடன் டீல் பேசிமுடித்து சுமார் தொள்ளாயிரம் தொலைக்காட்சி பெட்டிகளை வாங்கி அவற்றை விற்பனையும் செய்து முடித்தார் . இந்த தருணம்தான் Vasanth & Coவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது எனலாம்.

History of Vasanth & Co
இப்படி படிப்படியாக உயர்ந்து இன்று வியாபார உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக உயர்ந் திருக்கின்றார் வசந்தகுமார். தமிழகம், பாண்டிச்சேரி , பெங்களூர் , டெல்லி ,ஆந்திர பிரதேசம், மும்பை, கர்நாடகா, கேரளம் என இந்தியாவின் பல பாகங்களிலும் Vasanth & Coவின் கிளைகள் பரவலாக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு வெற்றிக்குப்பின்னும் அவர் என்றும் மாறாத நல்ல குணத்துடனும், வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகக்கூடிய எளிமையானவராகவுமே காணப்பட்டார்.

வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்குமே அவர்தம் வாழ்வில் சந்தித்த யாரேனும் ஓர் நபர் அல்லது ஏதேனுமோர் சம்பவம் அல்லது பயணம், இவ்வளவு ஏன் ஓர் புத்தகம் கூட அவர்களது வாழ்வில் மிகப்பெரியதோர் திருப்புமுனையாக அமையக்கூடும் . அந்தவகையில் மும்பைக்கான தொழில் மாற்றம் அவரை வேலையை இராஜினாமா செய்யத் தூண்டியிருந்தாலும் , உண்மையில் சொந்த தொழிலுக்கான அச்சாரத்தினை வசந்தகுமார் பெற்றுக்கொண்டதோ ஒரு சாதாரண பெயிண்டரிடம்தானம் ! VGP யில் மானேஜராக அயராது உழைத்தாலும் அது வாய்க்கும் வயிற்றுக்கும் போதாத நிலையிலேயே இருந்தது . இதுபோன்ற தருணங்களில் யாரிடமாவது கடன் வாங்கி சமாளித்துக்கொள்ளும் வசந்தகுமார் ஒரு இக்கட்டான நிலையில் ஒருவரிடம் கடன் கேற்பதற்காக மணிக்கணக்கில் அலுவலக வாசலில் காத்துக்கிடப்பதை அவதானித்த அவ்வலுவலக பெயிண்டர் ஒருவர்" வசந்தகுமார் உன்னிடம் திறமையும் அனுபவமும் இருக்கின்றது . இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கப்போகின்றாய் என்றார். அந்த வேலையை தூக்கிப் போட்டுவிட்டு வெளியே வா சொந்தமாக நீயே ஒரு கடையைப் போடு , அப்போதுதான் உனக்கென்று வெற்றி கிட்டும் என்றாராம் இவ்வார்த்தைகள் தன் மனதில் ஆழமாய் பதிந்தமையே தன் தொழில் முயற்சிக்கு விதையானது என தன்னுடைய பேட்டிகளின்போது கூறியிருக்கின்றார் வசந்தகுமார். சுமார் 2900 ஊழியர்களைக் கொண்ட Vasanth & Coவின் தற்போதைய சொத்துப் பெறுமதி 720 மில்லியன் அமெரிக்க டாலர் .

உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் யாரும் சாதிக்கலாம் என்ற படிப்பினையை வழங்கிய நிகழ்கால சகாப்தம் ஆகஸ்ட் 28,2020 அன்று மறைந்துவிட்டது, ஆனால் அவர் விட்டுச் சென்ற படிப்பினை மறையவில்லை. உழைத்துக் களைத்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் வசந்தகுமாரின் மறைவுக்கு எமது அஞ்சலிகள்.

Post a Comment

Previous Post Next Post