Charlie Chaplin (சார்லி சாப்ளின்)

Charlie Chaplin (சார்லி சாப்ளின்)
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள் அப்படிப் பார்த்தால் நம்மை வாய் விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். 1889 ஏப்ரல் 16 ஆம் திகதி லண்டனில் பிறந்தார் சார்ல்ஸ் ஸ்பென்சர் சாப்ளின், அவரது பெற்றோர்கள் மேடை இசை கலைஞர்கள், மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள். மேடைக் கச்சேரிகளில் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குடித்தே தீர்த்தார் தந்தை. அதன் பலன் நடக்க பழகும் முன்பே நடனமாடவும் பாட்டு பாடவும் கற்பிக்கப்பட்டான் சிறு வயது சாப்ளின். 5 வயதே ஆனபோது சார்லி சாப்ளினின் முதல் மேடை அரங்கேற்றம். தாய் நோய்வாய்ப்பட்டதால் மகனை மேடைக்கு தள்ளினார் தந்தை. மிரண்டுபோன சாப்ளின் மேடையில் ஏறி தனக்குத்தெரிந்த ஒரே பாடலை திரும்ப திரும்ப பாடினார். அதனால் அவரை மேடையிலிருந்து இழுத்துச்செல்லும் நிலைமை ஏற்பட்டது. 

அடுத்து தந்தையும் தாயும் பிரிந்தனர். குடித்து குடித்தே தந்தை இறந்து போனார். தாயாருக்கு அடிக்கடி உடல் நலமின்றி போனது. சாப்ளினும் அவரது அண்ணன் சிட்னியும் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 7 வயதானபோது சாப்ளின் ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார் ஆனால் அந்த குழு ஓராண்டில் கலைக்கப்பட்டது. அண்ணன் சிட்னி கப்பலில் வேலை பார்க்க சென்று விட்டதால் சில ஆண்டுகளை தனிமையில் கழித்தார் சாப்ளின் 14 ஆவது வயதில் ஒரு மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பத்திரிகைகள் அவரது நடிப்பை பாராட்டின. பின்னர் சாப்ளினும் அண்ணன் சிட்னியும் புகழ்பெற்ற ஃபெட்கானோ குழுவில் சேர்ந்தனர். அந்த குழு அமெரிக்காவுக்கு சென்று மேடை நாடகங்களை நடத்தியது. அதில் நடித்த சாப்ளின் பெயர் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தது. 

1913 ஆண்டு 24 ஆவது வயதில் அமெரிக்க திரைப்பட நிறுவனம் ஒன்று சாப்ளினுக்கு நல்ல வாய்ப்பை வழங்கியது. சாப்ளின் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். 'மேக்கிங் எ லிவிங்' என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு கருப்பு கோட்டும் பெரிய தொப்பியும் கண்ணாடியும் அணிந்து நடித்தார் பின்னாளில் அதுவே சாப்ளினின் அடையாளமானது. தனது 25 ஆவது வயதிலேயே முதல் படத்தை இயக்கினார் சாப்ளின். அதன்பிறகு பல படங்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகின. தனது எல்லா படங்களிலும் எல்லோரையும் சிரிக்க வைத்த சாப்ளினின் இளமைப் பருவம் மட்டுமல்ல திருமண வாழ்விலும் கசப்புக்கு மேல் கசப்பு ஏற்பட்டது. 

உலகையே சிரிக்கவைத்த சார்லி சாப்ளின் வாழ்க்கை மிக சோகமானது அவருக்கு நிம்மதியான மணவாழ்க்கை அமையவில்லை. 1918 ஆம் ஆண்டு சாப்ளின் 16 வயது நடிகை மேன்றோ ஹெரிசை காதலித்து மணந்து கொண்டார். அடுத்த ஆண்டு அவர்களுக்கு பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்து போனது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். 1924இல் மீண்டும் ஒரு நடிகையை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அந்த திருமணம் மூன்று ஆண்டுகள்தான் நீடித்தது. அதன் பின்னர் பாலத் கடாட் என்ற நடிகையை மணந்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இறுதியாக உனா உனில் என்ற பெண்ணை மணந்து கொண்ட பின்னர்தான் ஏழு பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்தார் சாப்ளின். 

சாப்ளினின் முதல் முழு நீள திரைப்படமான தி கிட் 1921இல் வெளிவந்தது. தனது ஆரம்ப வாழ்கையை அதில் சித்தரித்திருந்தார் அதனால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாப் ளினுக்கு பெரும் புகழை சேர்த்தது. 1925 இல் 'தி கோல்ட் ரஷ்' என்ற அவரது படம் வெளியாகி சாப்ளினின் புகழை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது. அந்த படத்தின் மூலம்தான் நான் நினைவு கூறப்பட விரும்புகிறேன் என்று அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். அதன் பிறகு பல புகழ்பெற்ற படங்களை தந்தார் சாப்ளின். பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தும் அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை விட்டு கொடுக்கவில்லை . மேலும் அவர் கம்யூனிஸ்டுகளை ஆதரிப்பவர் என்ற சந்தேகம் அமெரிக்காவில் நிலவியது. அந்த சந்தேகம் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது. 

Charlie Chaplin (சார்லி சாப்ளின்)
1951 இல் 'தி லைம் லைட்' என்ற புகழ்பெற்ற படத்தை தந்த சாப்ளின் அது வெளியான பிறகு தனது மனைவி பிள்ளைகளுடன் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாப்ளின் இனி மீண்டும் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது என்று அறிவித்தது அமெரிக்க அரசாங்கம். 'LOS ANGELES WALK OF FAME, என்ற நட்சத்திர பட்டியலில் இருந்து சாப்ளினின் பெயர் நீக்கப்பட்டது. ஆனால் மனம் தளராத சாப்ளின் சுவிட்ஸர்லாந்தில் குடியேறி தொடர்ந்து படம் தயாரிக்க ஆரம்பித்தார். 1964 ஆம் ஆண்டு தனது சுயசரிதையை வெளியிட்டார். 1967இல் அவர் இயக்கிய கடைசிப்படம் வெளிவந்தது 1972 ஓர் அதிசயம் நிகழ்ந்தது. திரைத்துறையில் பல உன்னத படைப்புகளை தந்தவர் என்பதையும் மறந்து எந்த தேசம் அவரை தனது எல்லைக்குள் மீண்டும் நுழைய கூடாது என்று கட்டளையிட்டதோ அதே அமெரிக்க தேசம் 20 ஆண்டுகள் கழித்து சாப்ளினை மீண்டும் திறந்த கைகளுடன் வரவேற்றது. 

அதே ஆண்டில் அவருக்கு அமெரிக்காவில் அகாடமி விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதோடு 'Los angeles walk of fame, என்ற நட்சத்திரப் பட்டியலில் சாப்ளினின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார் சாப்ளின். அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு சார் பட்டம் வழங்கி கௌரவித்தார் எலிசபெத் ராணியார். 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88 ஆவது வயதில் காலமானார் சார்லி சாப்ளின். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது. 

இன்று வாய் விட்டு சிரிக்க நினைக்கும் மில்லியன் கணக்கானோர் சார்லி சாப்ளினின் பழைய படங்களை பார்க்கின்றனர். இது ஒன்றே அந்த மாபெரும் கலைஞன் இந்த உலகிற்கு விட்டுச் சென்றிருக்கும் மாபெரும் சொத்தாகும். 
'இடுக்கண் வருங்கால் நகுக' என்ற திருக்குறளின் வரியை நாம் கேள்விப் பட்டிருப்போம். ஒரு சோகமான குடும்ப பின்னணியில் உதித்தாலும் நகைச்சுவை எனும் ஆயுதத்தை கொண்டு பல்லாயிரக்கணக்கானோர் சோகங்களை விரட்டியடித்தவர் சார்லி சாப்ளின். குடும்ப பின்னணி சரியாக இல்லாவிட்டாலும் வானத்தை வசப்படுத்தலாம் என்பதை வாழ்ந்து காட்டியவர் சார்லி சாப்ளின். சார்லி சாப்ளினைப் போலவே நமது குடும்ப பின்னணி எதுவாக இருந்தாலும் மனம் தளராமலும் விடா முயற்சியோடும் கடுமையாக உழைத்தால் எந்த வானத்தையும் வசப்படுத்த முடியும் என்பதுதான் சார்லி சாப்ளின் நமது காதோரம் சொல்லும் உண்மை.

Post a Comment

Previous Post Next Post