சூப்பர் மரியோ தொடக்க கதை(Super Mario startup story)

“காப்பாற்ற முடியுமா?'' “காப்பாற்ற முடியுமா?'' அமைதி. சிறிது நேர யோசனைக்குப் பிறகு அவரிடமிருந்து பதில் வருகிறது. "நிச்சயமாக முடியும் சார்.'' “மியமோட்டோ ... இந்த நிறுவனம் தன்னுடைய நூற்றாண்டை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், அதைக் கொண்டாடும் நிலையில் நாம் இல்லை. மிக மோசமான நஷ்டத்தையும், தொடர் தோல்விகளையும் சந்தித்து வருகிறோம். இதுதான் நமக்கான கடைசி வாய்ப்பு. அந்த வாய்ப்பு உங்கள் கையில் கொடுக்கப்படுகிறது. இதில் நாம் எப்படியாவது வென்றே ஆக வேண்டும்.'' "நிச்சயமாக சார்...'' தன் அறைக்குத் திரும்புகிறார் ஷிகெரு மியமோட்டோ (Shigeru Miyamoto). அன்று அவர் வீட்டிற்குப் போகவில்லை. நிறைய யோசிக்கிறார். பேப்பரை எடுத்து எதை, எதையோ வரைந்துகொண்டேயிருக்கிறார். மறுநாள் சந்திப்பில் இப்படிச் சொல்கிறார்...
விளையாட்டுக்கான கன்செப்ட் நம்மிடம் உள்ளது. அந்தக் கரக்டரைத்தான் இப்போது நாம் மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் பாப்பாய் கார்ட்டூனின் பாப்பாயைக் கொண்டு கேம் உருவாக்கலாம். அது நிச்சயம் வெற்றி பெறும்.
எல்லோருக்கும் பெரிய மகிழ்ச்சி. உடனடியாக வேலைகள் பரபரக்கத் தொடங்குகின்றன. பெரும் வெற்றிக்கான கனவில் மிதக்கிறார்கள். ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை .மியமோட்டோ... பாப்பாயைக் கொண்டு கேம் உருவாக்குவதற்கான உரிமை நமக்குக் கிடைக்கவில்லை. வேறு ஏதாவது வழியை யோசியுங்கள்.

சூப்பர் மரியோ தொடக்க கதை(Super Mario startup story)

மீண்டும் அதே அறைக்குத் திரும்புகிறார். இந்த முறை இரண்டு நாட்களைக் கடந்தும் வீட்டிற்குப் போகவில்லை. கடந்த முறையைக் காட்டிலும், இந்த முறை அதிகளவிலான பேப்பர்கள் கிழிக்கப்பட்டன. நிறைய வரைந்தார். இறுதியாக அந்த உருவத்தை வரைந்து முடித்தார். அந்த உருவம் நிறுவனத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், அவர் நம்பினார். இது ஜெயிக்கும் என்று அவர் நம்பினார். கட்டுமஸ்தான உடல் இல்லை, உயரம் இல்லை, கவர்ச்சியான உடல்வாகு இல்லை ... இது எதுவும் இல்லாத இந்தக் கதாப்பாத்திரத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?

சரி... இதற்கு என்ன பெயர் வைக்கலாம்?

சூப்பர் மரியோ தொடக்க கதை(Super Mario startup story)
வீடியோகேம் ஹீரோ என்பதால் இவன் பெயர் மிஸ்டர்.  ஜூலை 9, 1981... மிஸ்டர் நாயகனாக இருக்கும் அந்த டொங்கிகாங் (Donkey Kong) எனும் வீடியோ கேம் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. நம்ம ஹீரோ மிஸ்டர் ஒரு கொரில்லா குரங்கை வளர்ப்பார். அதை ஏகத்துக்கும் இவர் டார்ச்சர் செய்ய, ஒரு கட்டத்தில் அது கடுப்பாகி ஹீரோவின் காதலியைக் கடத்திக்கொண்டு போய் விடும். பலகட்ட பிரச்சினைகளைக் கடந்து, தன் காதலியை அதனிடமிருந்து மீட்பது இந்த வீடியோ கேமின் கதை. ஹிட் இல்லையென்றாலும், ஜப்பானில் அளவான ஹிட்டடித்தது இந்த கேம். இந்த கேமில் ஹீரோவால் ஓரிடத்தில் நிற்க முடியாது. குதிக்க முடியும் அல்லது நடக்க முடியும்.
அடுத்து அந்த ஹீரோவை வைத்து இன்னொரு கேம் உருவாக்கப்பட்டது. இதில் அவர் ஒரு மரவேலைகளைச் செய்யும் ஒரு தச்சர். ஏணிகளில் குதித்து, குதித்து ஏற வேண்டும். இந்த கேமும் பிரபலமாக மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. இந்த மிஸ்டர் வீடியோவிற்கு மக்களே ஜம்ப்மேன் (Jump Man) என்று பெயர் சூட்டினார்கள். இப்படியாக, கதாநாயகன் கொஞ்சம், கொஞ்சமாக வளரத் தொடங்கினார். நஷ்டத்தில் இருந்த நின்டெண்டோ (Nintendo) நிறுவனமும் மேல் எழத் தொடங்கியது.

இந்த நாயகனின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கும், இவன் பெயர் இவனுக்கு எப்படி வந்தது என்பதை அறிவதற்கு முன்னர்... அவன் உருவம் எப்படி உருவானது என்பதை இந்த நாயகனின் தந்தை ஷிகெரு மியமோட்டோவின் வார்த்தைகளிலேயே கேட்கலாம்...
அந்தக் காலங்களில் படங்கள் எல்லாம் மோனோக்ரோம் (Monochrome) 8 பிட் (8 Bit Image) தான். அதில் ஒரு நகரும் உருவத்தை உருவாக்குவது பெரிய சவாலான, கடினமான வேலையாக இருந்தது. முதலில் நிறைய உருவங்களை பேப்பரில்தான் வரைந்தேன். பின்னர் அதை எப்படி டிஜிட்டலாக மாற்றலாம் என்று யோசிப்பேன். இந்தக் குறிப்பிட்ட ஓவியத்தை வரையும் போது... அதன் மூக்கிலிருந்துதான் தொடங்கினேன். மூக்கையும், வாயையும் பிரித்துக்காட்டுவது பெரிய சவாலாக இருந்தது. சரி… இடையே ஒரு மீசை வைத்தால் அது வித்தியாசப்படும் என்று நினைத்து அந்த மீசையை வரைந்தேன். முடி வரைவது மிகவும் கஷ்டமாக இருந்தது. சரி என்று... தொப்பியை மாட்டி விட்டேன். இப்படித்தான் இவன் உருவானான்'' என்று சொல்லிச் சிரிக்கிறார் மீசையில்லாத ஷிகெரு. சரி.... நாயகனுக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்ற கதைக்கு வருவோம்.

1. மேரியோவின் முழுப் பெயர் “மேரியோ மேரியோ''

2.மேரியோ பல குழாய்களைக் கடந்து குதித்துப் போவான். மேரியோ அடிப்படையில் ஒரு ப்ளம்பர் (Plumber).

3. மேரியோ சீகல் இன்னும் அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில்தான் வசித்து வருகிறார். இது குறித்த விடயங்களைக் கேட்க யார் தொடர்பு கொண்டாலும் அவர் பேச மறுத்துவிடுகிறார்.

4. 1800களில் சீட்டாட்டத்திற்கான கார்டுகளைத் தயாரித்துக்கொண்டிருந்த நின்டெண்டோ நிறுவனம், பின்னர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு இன்று உலகின் முன்னணி வீடியோ கேம் நிறுவனமாக இருக்கிறது.

ஜப்பானில் ஹிட்டடித்த டாங்கிகாங் கேமை சில மாற்றங்களோடு அமெரிக்காவிற்கு கொண்டு சென்றது நின்டெண்டோ நிறுவனம். அங்கு தன் பொருள்களை இறக்குமதி செய்து பாதுகாப்பாக வைக்க ஒரு கிடங்கை வாடகைக்கு எடுத்தது. சில காரணங்களால் அந்தக் கிடங்கிற்கான வாடகையை, நிறுவனம் சில மாதங்களாகக் கட்டவில்லை . இதனால், அந்தக் கிடங்கின் உரிமையாளர் நேராக வந்து, நிறுவனத்தின் உரிமையாளரிடம் சண்டை பிடித்தார். இந்தச் சம்பவம் அந்த நிறுவனத்தில் அப்போது அதிகமாகப் பேசப்பட்டது. ஷிகெருவுக்கும் அந்தச் செய்தி சென்றடைந்தது. மேரியோ சீகல் (Mario Segale) எனும் அவர் நம் நிறுவன முதலாளியைக் கடுமையாகத் திட்டிவிட்டார். இந்தச் செய்தி அவருக்குப் பிடிக்கவில்லை . ஆனால், அந்தப் பெயர் அவரை ஏதோ செய்தது.


மேரியோ... மேரியோ... மேரியோ

ஹா.... இதுதான் நம் கதாநாயகனின் பெயர். முடிவு செய்துவிட்டார். இந்தப் பெயர் கண்டிப்பாகப் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்பினார். கொரில்லா, ஏணி என இருந்த கேமை விட்டு முற்றிலும் புதிதாக ஒன்றை யோசித்தார். மேரியோவுக்கென ஒரு புது உலகத்தை உருவாக்கத் தீர்மானித்தார். இதோ.... உருவாகிறது புது மேரியோ உலகம். கொஞ்சம், கொஞ்சமாக அந்த உலகத்தைச் செதுக்கினார். உலகையே இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆட்டிப்படைக்கும் அந்த உலகை உருவாக்கினார். மேரியோவாக தொடங்கிய அந்தப் பயணம், இன்று 200க்கும் அதிகமான கேம்களைக் கடந்து போய்க்கொண்டிருக் கிறது. தலைமுறைகள் தாண்டி இன்றும் உலகம் முழுக்க மேரியோவுக்கென பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். வீடியோ கேமில் மேரியோவின் தம்பியாக லுய்ஜி (Luigi) என்ற கதாப்பாத்திரத்திற்கு எப்படிப் பெயர் வைத்தீர்கள் என்ற கேள்வி கேட்டபோது,

இத்தாலி மொழியில் இரண்டாவது பிரபலமான பெயர் எது என்று தேடினேன். அது லுய்ஜி என்று வந்தது. அதற்கு ஜப்பானிய மொழியில் ஒற்றுமை என்று அர்த்தப்பட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வந்தது. சரியென்று அந்தப் பெயரை வைத்துவிட்டேன்... என்று லுய்ஜியின் வரலாற்றைச் சொல்கிறார்.

பொதுவாக, இதுபோன்ற வீடியோ கேம்களிலோ, திரைப்படங்களிலோ கட்டுமஸ்தான உடல் கொண்ட கதாப்பாத்திரம்தான் ஹீரோவாக இருக்கும். ஆனால், குள்ளமாக, சின்ன தொப்பையோடு இருக்கும் மேரியோவை ஏன் இப்படி உருவாக்கினீர்கள் என்று கேட்டதற்கு, நான் வரைய நினைத்தது மக்களிலிருந்து தனித்துத் தெரியக்கூடிய ஒரு சூப்பர் ஹீரோவைக் கிடையாது. மக்களோடு மக்களாக இருக்கும் ஒரு ஹீரோவைத்தான். ஹீரோ என்பவன் மக்களில் ஒருவன்தான். எளியவர்களின் ஹீரோவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இவனை உருவாக்கினேன்... மேரியோ மக்களின் நாயகன்... மக்களுக்கான நாயகன் என்று சொல்கிறார்.

Post a Comment

Previous Post Next Post