விதி(The Destiny)

  • 1900ஆம் ஆண்டு ஜூன் மாதம் இத்தாலிய அரசர் உம்பர்டோ(King Umberto) மோன்ஸா என்ற நகரில் ஒரு பெரிய ஹோட்டலில் உணவருந்தச் சென்ற போது அதிர்ச்சியடைந்தார். காரணம் அந்த ஹோட்டல் உரிமையாளர் அசப்பில் அவரைப் போலவே இருந்தது தான். அவரிடம் பேசிய போது மேலும் பல ஆச்சரியங்கள் அவருக்குக் காத்திருந்தன. அந்த ஹோட்டல் உரிமையாளர் பெயரும் உம்பர்டோ. இருவர் மனைவியர் பெயரும் மார்கரிட்டா. அந்த மன்னர் முடிசூடிய அதே நாளில் தான் அந்த ஹோட்டல் உரிமையாளர் அந்த ஹோட்டலை ஆரம்பித்தார். இருவர் பிறந்ததும் ஒரே நாள் 14.03.1844. ஆச்சரியத்தோடு அந்த ஹோட்டல் அதிபருடன் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சென்ற மன்னர் ஒரு மாதம் கழித்து 29.07.1900 அன்று அந்த ஹோட்டல் உரிமையாளர் ஒரு துப்பாக்கிச் சூட்டில் சற்று முன் தான் காலமானார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டார். சில மணி நேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார். 
  • Ohioவில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளிவந்தன. இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இரு வேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இரு குடும்பங்களும் ஒன்றுக்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமுலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெய ருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alan என்றும் இன்னொருவர் James Allan என்று ஒரு எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி (Betty) என்ற பெயருடைய பெண்களையே. இருவரும் தங்கள் நாய்க்கு Toy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்ப தாண்டு காலம் கழிந்து இணைந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர். 
  • ஹென்றி சீக்லேண்ட் (Henry Ziegland) என்பவன் 1883ஆம் ஆண்டு தன் காதலியுடனான உறவை முறித்துக் கொண்டான். அந்தக் காதலி மனஉளைச் சலில் தற்கொலை செய்து கொள்ள அவளுடைய சகோதரர் கடும் கோபமடைந்து சீக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து சுட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்லேண்ட் சாகவில்லை. அந்தத் துப்பாக்கிக் குண்டு முகத்தை உரசிக் கொண்டு சென்று அங்கிருந்த மரத்தில் சென்று பதிந்தது. சில வருடங்கள் கழித்து அந்தப் பெரிய மரத்தை வெட்டி விட சீக்லேண்ட் நினைத்தான். ஆனால் அதை அவ்வளவு சுலபமாக வெட்டி விட முடியவில்லை . எனவே டைனமைட் குச்சிகளை வைத்து மரத்தைப் பிளக்க நினைத்தான். அப்படிச் செய்கையில் அந்த மரம் சுக்கு நூறாகி வெடிக்கையில் அந்தக் குண்டு சீக்லேண்டின் தலையில் பாய்ந்து அந்த இடத்திலேயே சீக்லேண்ட் மரணமடைந்தான். 
  • மேஜர் சம்மர்ஃபோர்ட் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதல் உலகப் போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்புக்குக் கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டிருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டார். வலது பக்கம் பக்கவாதம் அவரைப் பாதித்தது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடல் முழுவதும் செயலிழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விடுவதாக இல்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல் லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதிலமாகியது. 
இந்த நிகழ்ச்சிகள் நம்மை ஆச்சரியப்படவைக்கின்றன அல்லவா? இவற்றை எல்லாம் தற்செயல் என்று கண்டிப்பாக நாம் நினைத்து விட முடியாது. இந்த சம்பவங்களைப் படிக்கையில் அவற்றில் முன்பே தீர்மானிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஓர் அம்சம் இருக்கிறது என்றல்லவா தோன்றுகிறது. ஏன், எதற்கு என்பது விளங்கா விட்டாலும் கூட அந்த ஏதோ ஒரு விதியை நம்மால் மறுக்க முடிவதில்லை அல்லவா?



Post a Comment

Previous Post Next Post