நன்றி மறவாமை

அவனை எவ்வளவோ நாட்கள் கழித்து என் வீட்டு வாசலில் பார்த்தேன். மனைவி சகிதம் வந்திருந்தான். அவனைப் பார்க்கவே எனக்கு விருப்பமில்லை. எத்தனையோ பேருக்கு நான் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கின்றேன். இவனைப் போன்ற நன்றி மறந்த ஜென்மத்தை நான் பார்த்ததே இல்லை. நான் உதவி செய்தவர்களெல்லாம் நான் ஓய்வு பெற்ற பின்பும் வாழைப்பழம், பலாப்பழம், பிஸ்கட் பெட்டி, சொக்லட்கள் என வாங்கி வந்து நன்றி சொல்வார்கள். ஒருமுறை ஒருவனை பொலிஸ் பிடியிலிருந்து மீட்டெடுத்ததற்கு தங்கச் செயின் பூட்டிய விலையுயர்ந்த வாச் ஒன்றைப் பரிசளித்திருந்தான்.
இவன் இந்த அர்ஜூன் பட்டப் படிப்பை முடித்து விட்டு வேலை கிடைக்காமல் வெட்டியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த வேளை நானே அமெரிக்காவுக்கு பிளேன் டிக்கட் எடுத்து பணமும் கொடுத்து மேல் படிப்புக்காக அனுப்பி வைத்தேன். ஒரு வருடத்திற்கு பின்பு ஸ்கொலர்சிப் கிடைத்ததாகவும் அந்தப் பணத்தில் படிப்பதாகவும் எனக்கு ஒரு தடவை போன் செய்தான். அதன் பிறகு கடந்த வருடம் கொழும்புக்கு வந்து போனதாக யாரோ சொல்லக் கேள்விப்பட்டேன்.அவ்வளவுதான். ஆனால் இவன் மாதிரி ஆசாமிகள் நேரில் கண்டால் குழைவார்கள். இந்த வாழ்க்கையே நீங்கள் போட்ட பிச்சை என்பார்கள். சே! என்ன மனுஷன் இவன். வீடு தேடி வந்திருக்கிறானே எப்படி தவிர்ப்பது?

அவனும் மனைவியும் எனது காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்க வந்திருக்கிறார்களாம். "எப்படி இருக்கிறீர்கள். அப்பப்பா?" என்றாள் அவன் மனைவி. எங்கோ கேட்ட குரலாக இருக்கிறதே? கூர்ந்து அவதானித்தேன். எனது மகனின் புத்திரி. எனது பேத்தி. கொழும்பில் இருக்கிறார்கள். விழிப்புலனற்றவள் எப்படி இப்போது கண் தெரிகிறது. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவளைப் பார்த்தேன்.

அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர். அப்பப்பா இவர்தான் என்னை அமெரிக்கா கூட்டிப் போய் வைத்தியம் பார்த்து எனக்குப் பார்வையளித்த தெய்வம். நாங்கள் அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டு உங்களிடம் ஆசீர்வாதம் பெற வந்துள்ளோம் என்றாள். முகம் மலர. நான் உறைந்து போனேன்.

Post a Comment

Previous Post Next Post