Why should a baby sleep in a saree Cradle?

அன்று குழந்தைகளை தாயின் சேலையில் தொட்டிலை கட்டி தரைபடாமல் தொங்கவிட்டு ஊஞ்சல் ஆட்டி நம்மை நம் தாயும், பாட்டியும் உறங்க வைத்தார்களே! அந்த புடவை தொட்டிலின் பாரம்பரியத்தையும் அறிவியலையும் தெரிந்து கொள்வோம்.

Why should a baby sleep in a saree Cradle?

நம் ஆதி பெண்கள் பிரசவித்த சில நாட்களிலேயே தன் வீட்டு வேலைகளை செய்ய தொடங்கிவிடுவார்கள். அன்றைய காலத்தில் வீடும், விவசாய நிலமும் சேர்ந்தே இருக்கும். வரப்பில் இருக்கும் மரத்தில் தன் புடவையை தொட்டிலாக்கி கட்டி குழந்தையை தூங்க வைத்துவிட்டு வயல் வேலைகளைக் கவனிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

பிறந்த குழந்தைக்கு தாயின் வாசனையும் கதகதப்புமே அடையாளம். தாயின் புடவையில் தொட்டில் கட்டும்போது தாய் தன்னோடு இருப்பது போன்ற உணர்வு அந்த குழந்தைக்கு கிடைக்கும். வேப்ப மரத்தில் ஆடும் தொட்டிலில் இயற்கையான காற்றில் குழந்தை தூங்கும். பூமியில் இருந்து இரண்டு அடி உயரத்தில் தொட்டிலில் தூங்கும் குழந்தைக்கு எளிதாக காற்று கிடைக்கும்.

சில வசதி படைத்தவர்கள் குழந்தை நழுங்க கூடாது என்பதற்காக வீட்டில் மான் கொம்பில் பாரம்பரிய தொட்டிலை கட்டுவதும் வழக்கம். இதற்காகவே ஒவ்வொரு வீட்டிலும் அந்த காலத்தில் மான்கொம்பு வைத்திருந்தார்கள். பனிக்குட நீரில் நீந்தி பழகிய குழந்தை தாய் நடக்கும் போதும், உடல் அசைவின் போதும் ஊஞ்சல் ஆட்டத்தை கருவறையில் உணரும். அந்த இருட்டும் கதகதப்பும் அதற்கு பாதுகாப்பு உணர்வைத் தரும்.

தொட்டிலில் அசையும் போது குழந்தை தன் தாயின் கருவறை அசைவுகளை அதில் உணர்ந்து ஆழ்ந்து உறங்கிக் கொள்ளும். இடையில் தூக்கம் இடறினாலும் குழந்தை தொல்லையின்றி தூக்கத்தை தொடர பாரம்பரிய தொட்டிலே சிறந்தது என்கிறார்கள் பிசியோதெரபி(Physiotherapy) மருத்துவர்கள். ஆனால் இதை அன்றே நம் பாட்டிகள் அறிந்து பயன்படுத்திவிட்டார்கள். மேலும் தொட்டிலில் இட்டு ஆட்டும் போது குழந்தைக்கு வயிற்று வலி மற்றும் ஜீரண கோளாறுகள் சரியாகிவிடும் எனவும், குழந்தைக்கு கழுத்து வெளிவராமல் முதுகுத்தண்டை பாதுகாக்கும் என்றும் அன்றே சொல்லிவிட்டார்கள்.

இன்றைய ஹைடெக்(Hi-tech) அம்மாக்கள், ஆயிரங்களை கொட்டி வாங்கும் தொட்டிலில் கம்பிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி சுற்றிலும் நெட்(Net) மற்றும் ஜிப்(Zip) வைத்து தைக்கப்பட்டு கொசு தொல்லையிலிருந்து பாதுகாப்பதற்காக நெட்டெட் கவரை(Neted Cover) ஜிப் போட்டு மூடி சுற்றிலும் குட்டி குட்டி தலையணைகளை வைக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் ஒரு பாதுகாப்பற்ற சூழலில் தனியாக உறங்குவது போன்ற உணர்வையே இந்த வகை தொட்டில்கள் குழந்தைகளுக்கு தருகின்றன.

அமெரிக்காவில் இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு முதல் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டுவரை(2004-2008) நடாத்தப்பட்ட ஆய்வில், ஆண்டுக்கு ஒன்பதாயிரத்தி ஐந்நூறு(9500) குழந்தைகள் தொட்டில் காயங்களால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எண்பத்தி மூன்று சதவிகிதம்(83%) குழந்தைகள் தொட்டிலில் இருந்து தவறி விழுந்ததால் ஏற்பட்ட காயங்கள். ஆண்டுக்கு நூறு குழந்தைகள் குழந்தை பருவத்தில் அல்லது தவழும் பருவத்தில் பாதுகாப்பற்ற முறையில் தூங்குவதால் இறக்கின்றன என்ற அதிர்ச்சியையும் இந்த புள்ளி விவரம் தருகிறது. பாதுகாப்பு அம்சங்களில் உள்ள குறைபாட்டின் காரணமாக அமெரிக்காவில் பதினோரு மில்லியன்(11 million) நவீன தொட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.

இதுபோன்ற ஆய்வுகள் நம் ஊரில் நடத்தப்படவில்லை என்றாலும், குழந்தையை நவீன தொட்டிலில் இட்டு ஆட்டி தூங்க வைப்பதை விட பத்து மாதம் சுமந்து பட்ட பாடும் மறந்து பிள்ளை செல்வம் பிறக்க அள்ளி கையில் எடுத்த தாயின் புடவையே குழந்தைக்கு தொட்டில். அது ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் நல்ல உறக்கத்தையும் குழந்தைக்கு தரும்.

Post a Comment

Previous Post Next Post