ஒரு வயதிலேயே முதலீடு 92 வயதில் கோடீஸ்வரன்

எந்தக் காரணம் கொண்டும் மூலதனத்தை, அதாவது பணத்தை இழக்கக்கூடாது என்பது முதல் விதிமுறை. முதல் விதிமுறையை எப்போதும் மீறக்கூடாது என்பது இரண்டாவது விதி என்பது வாரன்பஃபெட்டின்(Warren Buffett) முக்கிய மந்திரம்.
ஒரு வயதிலேயே முதலீடு 92 வயதில் கோடீஸ்வரன்
உலகின்முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளர், வாரன்பஃபெட்(Warren Buffett). அவரின் சொத்து மதிப்பு சுமார் 10,460 கோடி அமெரிக்க டொலர். இந்திய ரூபாவில் 8.57.720 கோடி. தனது திறமையின் மூலம் 30 வயதிலேயே கோடீஸ்வரர் ஆன வாரன்பஃபெட்(Warren Buffett), இப்போது தனது 92 ஆவது வயதில் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கிறார். பங்குச்சந்தை முதலீடு குறித்து அவர் தெரிவித்திருக்கும் மந்திரங்கள் பலருக்கும் கோடீஸ்வரர் ஆக பாதை காட்டக்கூடியவை. அவை இங்கே...

வாரன் தன் 11 வயதில் முதன்முதலில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். 38 டொலருக்கு முதல் பங்கை வாங்கியவர். குறுகிய காலத்தில் அந்தப் பங்கின் விலை 40 டொலராக அதிகரித்த போது, அதை இரண்டு டொலர் இலாபத்துக்கு விற்றார். ஆனால், சிறிது காலம் கழித்து அந்தப் பங்கின் விலை மிகவும் அதிகரித்த போது. தான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறோம் என்று எண்ணினார். வாங்கிய பங்குகளைச் சிறிய இலாபத்துக்குக் குறுகிய காலத்தில் விற்பது தவறு என்று உணர்ந்தார். அன்று முதல் அவர் நீண்டகால முதலீட்டாளராக இருக்கிறார்.

எந்தக் காரணம் கொண்டும் மூலதனத்தை, அதாவது பணத்தை இழக்கக்கூடாது என்பது முதல் விதிமுறை. முதல் விதிமுறையை எப்போதும் மீறக்கூடாது என்பது இரண்டாவது விதி என்பது வாரன்பஃபெட்டின்(Warren Buffett) முக்கிய மந்திரம். அதாவது, உங்கள் பங்கு முதலீடு மிக நீண்டகாலத்துக்கானது. மற்றும் ஒரு நிறுவனப்பங்கை அவசரப்பட்டு முதலீடு செய்யத் தேர்வு செய்யக்கூடாது. நன்கு அலசி ஆராய்ந்து, இழப்பு ஏற்படாத அளவுக்கு நல்ல நிறுவனமாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். நிறுவனப் பங்குகளைப் பத்து ஆண்டுகள் வரை நீங்கள் வைத்துக் கொள்ளும் திட்டம் இல்லை என்றால் பத்து நிமிடங்கள் கூட அது குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டியதில்லை என்று சொல்லும் அவர், 'நீண்டகால முதலீடு தான் நல்ல இலாபத்தை தரும்' என்கிறார். 'பங்கு முதலீட்டை மேற்கொள்ளும் போது, சுயமாக முடிவெடுங்கள். அடுத்தவர்களுக்காகவோ, அடுத்தவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகவோ முடிவெடுக்கக் கூடாது' என்று அறிவுறுத்துகிறார்.

“இந்தப் பங்குச் சந்தை விளையாட்டுக்குப் பணம் ரொம்ப முக்கியம். அதனை ஆக்சிஜன்(Oxygen) என்று கூடச் சொல்லலாம். அது இல்லையென்றால் அடுத்தநாள் இங்கு விளையாடவே (முதலீடுசெய்ய) முடியாது. அது வெறும் சில நிமிடங்கள் இல்லை என்றாலும் கூட இங்கு எல்லாம் முடிந்து விடும்" என தனது நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் (ஏ.ஜி.எம்) பணம் குறித்து வாரன் பேசியிருப்பது மிகவும் அர்த்தமுள்ளது. அதனால் கையில் எப்போதும் சிறிது பணம் இருப்பது அவசியம். அது விலை வீழ்ச்சி வாய்ப்பைப் பயன்படுத்தி முதலீடு செய்யப் பெரிதும் உதவும் நல்ல நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் குறையும் போது வாங்கப் பணம் தயாராக இருக்க வேண்டும் என்பது அவர் அறிவுரை.

'ஒருவர் தனிப்பட்ட முதலீட்டுத் திறமையை வளர்த்துக் கொள்ளச் செலவு செய்வதும் ஒரு சிறந்த முதலீடு. இது வரையில் செய்த சிறந்த முதலீடு எது என்றால் உங்களை நீங்களே வளர்த்துக் கொள்வது தான். உங்களின் திறனை யாருமே பறிக்க முடியாது. இன்று வரை வாரன்பஃபெட் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதில்லை. காரணம், அந்தத் துறையின் செயற்பாடுகளைத் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அவர் நினைக்கிறார். அதே காரணத்துக்காக, கிரிப்டோகரன்ஸிகளிலும்(Cryptocurrency) வாரன்பஃபெட் முதலீடு செய்த தில்லை. எனவே, எந்தவொரு முதலீட்டுக்கும் அது குறித்த அறிவை அவர் வலியுறுத்துகிறார். முதலீட்டுக்கு முன்... வாரன்பஃபெட்டின் மந்திரங்களை மனதில் வைப்போம்!

Post a Comment

Previous Post Next Post