டிராகுலா என்னும் பயங்கரம் உருவான கதை(Dracula is a Horror Story)

பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து சுமார் நானூறு ஆண்டுகள்... அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியா வரை, ஏழையிலிருந்து பணக்காரன் வரை... யாராக இருந்தாலும் சரி இரவு வந்தாலே பலருக்கு இதயத்துடிப்பு அதிகமாகும். ஈரக்குலை சில்லிட... காதுகள் அடைத்துக்கொள்ளும், பயத்தில் உடம்பிலே ஓர் உஷ்ணம் பரவும். நாக்குகள் வறண்டு போகும். காரணம் வம்பயர்! அதாவது, 'ட்ரகுலா', ட்ரகுலா என்பது உயிருள்ள பிணம். இந்தப் பிணம் இரத்த வெறி பிடித்தது! இரவானால் தன் உடம்புத் தோலை உரித்து வைத்து விட்டு வௌவால் மாதிரி பறந்து வரும். இதைக் கண்டு, உலகமே அத்தனை கதவுகளையும் அடைத்துக்கொண்டு வீட்டுக்குள் ஒடுங்கி விடும். ஆனால், வம்பயர் விடாது. சாவித்துவாரம் அளவுக்கு ஓர் இடைவெளி இருந்தால்கூட போதும் உள்ளே வந்து தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் இரத்தத்தை அது குடித்து விடும். இரத்த வெறி பிடித்த வம்பயராக இருந்தால், இதனிடம் மாட்டும் இளம் பெண்களின் நிலை அதோ கதிதான்.

இதிலே எது கதை... எது உண்மை .... எது வதந்தி... என்று இனம் பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு உலகமே பயத்தில் இருண்ட கண்களோடு அப்போது இருந்தது. அதனால், அவர்கள் பார்த்துப் பயந்ததெல்லாம் ட்ரகுலாவாகத் தெரிந்தது.

ருமேனிய மொழியில் 'ட்ராகூல்' என்றால், இரத்த வெறி பிடித்த சாத்தான் என்று அர்த்தம்! ட்ரகுலா யாரைக் கொன்று இரத்தத்தைக் குடிக்கிறதோ, அவர்களும் இரத்த வெறி அவர்களும் இரத்த வெறி பிடித்த ட்ரகுலாவாக மாறி விடுவார்கள்  
என்பதால், 'ட்ரகுலாவால் கொல்லப்பட்டவர்' எனச் சந்தேகப்படும் நபர்களின் பிணங்களை அட்டைக்கரி ஆகும் அளவுக்குத் தீயிலே பொசுக்கி நிலத்தின் வெகு ஆழத்தில் புதைத்தார்கள். நீலநிறக் கண்களை உடையவர்கள்.. பிறக்கும் போதே பற்களோடு பிறக்கும் குழந்தைகள்... மூளைக்கோளாறு கொண்டவர்கள்... இவர்கள் எல்லோரையுமே ட்ரகுலா என்று உலகம் அஞ்சி விலகியது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு அரக்கத்தனங்களுடன் வம்பயர் தோன்ற ஆரம்பித்தது. சிலுவைக் குறி, பூண்டு இவை இரண்டுக்கும் மட்டுமே வம்பயர் அஞ்சும் என்ற நம்பிக்கை இருந்ததால், மக்கள் தங்கள் கழுத்தில் சிலுவைக் குறியையும் வீட்டின் ஜன்னல் கதவுகளில் பூண்டுக் கொத்துகளையும் தொங்க விட்டார்கள். உலகம் விஞ்ஞான யுகத்தில் நுழைந்த பிறகும் கூட வம்பயர் மறையவில்லை . எப்படி ஆரம்பித்தது இந்த ட்ரகுலா பீதி?

1430ஆம் ஆண்டு ட்ரான்சில்வேனியாவில் (இப்போது ருமேனியாவில் இருக்கிறது) வ்ளாட் ட்ரகுலா(Vlad Dracula) என்ற ஓர் இளவரசன் இருந்தான். அவன் சிறுவனாக இருந்த போது அவன் கண்களுக்கு முன்பே அவனது அப்பாவையும் அண்ணனையும் துருக்கிய எதிரிகள் கொடூரமாகச் சிதைத்து உயிரோடு எரித்தனர். அதனைத் தொடர்ந்து இந்தச் சிறுவன் மன்னனான பிறகு, தான் சிறைப் பிடிக்கும் துருக்கியர்களைப் பழிக்குப் பழி வாங்க அவர்களை இரும்புக் கம்பிகளால் குத்தி சித்திரவதை செய்தான். அப்போது அவனுக்கு இரத்தத்தின் சுவை பிடிக்க ஆரம்பித்தது! மனித மாமிசம் அவன் நாக்கை தாளம் போட வைத்தது ! தன்னை எதிர்ப்பவர்களை அவன் கொதிக்கும் நீரில் தள்ளினான். ஒரு நாள் அவன், தன் படைகளோடு ஒரு கிராமத்துக்குச் சென்று ஒரே நாளில் தன் சொந்த நாட்டைச் சேர்ந்த முப்பதாயிரம் மக்களை மிருகங்களைப் போல வேட்டையாடிக் கொன்றான். வ்ளாட் ட்ரகுலாவை பற்றி இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 1476ஆம் ஆண்டில் ஒரு நாள் அவன் துருக்கியர்களால் தலை துண்டித்துக் கொல்லப்பட்டான். ஆனால், சில ஆண்டுகள் கழித்து அவனை அடக்கம் செய்த சவப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது அங்கே அவனின் பிணம் இல்லை ! இந்தச் செய்தி மக்கள் மத்தியில் பரவ... வ்ளாட் ட்ரகுலாவால் பலர் இரத்தம் உறிஞ்சப் பட்டுக் கொல்லப்படுவதாக வதந்தி பரவியது. அப்போது ஆரம்பித்த வதந்தியும் பயமும் பல நூறு ஆண்டுகள் ஆகியும் மறையவில்லை . இந்தப் பயத்தை மறைய விடாமல் செய்யும் வேலையை வதந்திகளும் மக்களின் அறியாமையும் ஏற்றுக் கொண்டன. பிறகு, இந்த வேலையை நாவலாசிரியர்களும் சினிமாக்காரர்களும் பற்றிக் கொண்டனர். ட்ரகுலாவை வைத்து நாவல்கள் எழுதப்படாத மொழியே இல்லை!

ஜெர்மனியில் 1828ஆம் ஆண்டில் வெற்றிகரமாக ஒரு 'ட்ரகுலா' நாடகம் போட்டார்கள். பிறகு 1897ஆம் ஆண்டு ப்ராம் ஸ்டோக்கர் எழுதிய 'டிரகுலா' தான் இதில் நம்பர் ஒன்! கற்பனை கலந்து எழுதிய அந்தப் புத்தகம் உலகப் புகழ் பெற்று, இன்று வரை அந்தப் புத்தகத்தின் அடிப்படையில்தான் ட்ரகுலா சினிமாக்கள் எடுக்கப்படுகின்றன. பிறகு வந்த திரைப்படங்களில் கிறிஸ்டோபர் லீ(Christopher Leeட்ரகுலாவாக நடித்து எல்லோரையும் பயமுறுத்தியது தனி(திரை)க்கதை!

ட்ரகுலா எப்படித் தோற்றமளிக்கும் என்பதையும் மிகுந்த கற்பனையோடு எழுத்தாளர்கள் முடிவு செய்தார்கள்! வெளிறிப் போன முகம், 'ஜில்' என்று உடல், நீண்ட கறுத்த ஆடை! அதன் உடல் அட்டை (Leech) மாதிரி! இரத்தம் கிடைக்காவிட்டால், 'எகிப்திய மம்மி' மாதிரி இளைத்து விடும். ரத்தம் குடிக்க குடிக்கக் 'கும்' மென்று பருமனாகும் ! கூர்மையான கோரைப் பற்கள், நீலநிற விழிகள்... நமக்கெல்லாம் மூக்கில் இரு துவாரங்கள் (Nostrils) ஆனால் ட்ரகுலாவுக்கு ஒரே ஒரு துவாரம்தான்! இறந்துபோன பிறகு தான் ட்ரகுலாவாக முடியும்! ட்ரகுலாவுக்குச் சூரிய வெளிச்சம் ஆகாது. விடிவதற்குள் மனித இரையைத் தேடித் பிடித்துக் கடித்து இரத்தம் குடித்துவிட்டுச் சவப்பெட்டிக்குள் சென்று படுத்து விடும். 'சூரியன் வந்தால் செத்துப் போய்விடுமா?' என்கிற கேள்வி அர்த்தமற்றது. செத்துப் போனவர்தானே ட்ரகுலாவாக முடியும் பின், ட்ரகுலாவை எப்படித்தான் ஒழிப்பது? முதலில் அது எந்தக் கல்லறைக்குள் இருக்கிறது என்பதை இடுகாட்டுக்குச் சென்று தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும்!

சென்ற நூற்றாண்டில், பூசாரிகள் உதவியுடன் ஒவ்வொரு கல்லறையாகத் தோண்டி ட்ரகுலாவைத் தேடிக் கண்டுபிடிப்பார்கள். உடனே தலையை வெட்டி எடுத்து, அங்கேயே அதனுடைய கால்களுக்கு நடுவில் தலையை வைத்துவிட்டால், டிரகுலா பிறகு எழுந்து வராது! ஊசியால் குத்தினால், டரகுலாவுக்கு இரத்தம் வரும்! இரத்த ஓட்டத்தை நிறுத்த, அதன் இதயத்தைப் பிய்த்தெடுத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு எரித்து விடுவார்கள். எல்லோருக்கும் தெரிந்த சினிமாக்கள் மூலம் பிரபலமான ஒரு வழி,மரத்தால் செய்யப்பட்ட பெரிய ஆணியை அதன் இதயத்துக்குள் செலுத்துவது தான்! மொத்தத்தில், உலகமெங்கும் மக்கள் 'ட்ராகுலா'வை நம்ப விரும்பினார்கள்!

பொதுவாகவே சினிமா ட்ரகுலாக்கள் ரொமாண்டிக் டைப். சினிமாவில் ட்ரகுலா மென்மையாக அணைத்துக்கொண்டு, கழுத்தில் சுருக்கென்று தன் கோரைப் பல்லால் கடித்து, வழியும் ரத்தத்தை கச்சிதமாகச் சுவைக்கும் ! அதில் விபரீதமாக ரொமான்ஸும் கலந்திருக்கிறது! விலங்குகளின் இரத்தம் குடிக்கும் வம்பயர் வௌவால்கள் உலகில் உண்டு. இது விஞ்ஞானபூர்வமான உண்மை.

Post a Comment

Previous Post Next Post