விக்கிப்பீடியா பற்றி தேடி இருக்கிறீர்களா?(Are you searching about Wikipedia?)

எல்லா ஸ்டார்ட் அப்புகளும், தொழில் முனைவோர்களும் பணம் சம்பாதிக்க மட்டும் உருவாவதில்லை. சிலருக்குப் பணத்தை விட சாதனை பெரிது. கணினி யுகத்தில் பல தொழில் நுட்பங்கள் இலவசமாக மக்களுக்குத் திறந்துவிடப்பட்டவை. அவை அவ்வாறு உருவாகவில்லை என்றால் இன்று பல தொழில்கள் பிறந்திருக்க வாய்ப்பே இல்லை. லினக்ஸ், பிஹெச்பி, அப்பாச்சி சர்வர் போன்ற தொழில் நுட்பங்கள் இலவசமாகத் திறந்துவிடப்படவில்லை என்றால் இன்று பேஸ்புக் இல்லை, யாகூ இல்லை, பல இணையத்தளங்கள் உருவாகியிருக்கும் வாய்ப்புகள் குறைவுதான்.

என்சைக்ளோபீடியா என்ற தகவல் களஞ்சியம் ஒருகாலத்தில்
பணக்காரர்களின் வீடுகளில், பெரிய நூலகங்களில் மட்டுமே காணக்கிடைக்கும் அரிதினும் அரிதான, விலை அதிகமுள்ள புத்தகங்களின் தொகுப்பு. இணையம் பரவலான பத்தாண்டுகள் வரை அவை எல்லோருக்கும் மலிவாக, விலை குறைவாகப் போய்ச் சேர்ந்தது. ஆனால் இலவசமாக சென்று சேரவில்லை , ஜிம்மி வேல்ஸ் என்ற மனிதர் அதைக் கனவு காணும் வரை.

ஜிம்மி வேல்ஸ்ஸின் தந்தை ஒரு பலசரக்குக் கடை மனேஜர். அம்மாவும் பாட்டியும் வீட்டின் ஒரு பகுதியில் சிறிய பள்ளி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஜிம்மியும், அவரது சகோதரர்கள் மற்றும் வீட்டுக்கு அருகில் உள்ள குழந்தைகள் படித்தது அங்கேதான். ஜிம்மி சிறு வயதிலேயே புத்தகங்களின் மீது பெரும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதற்கு அவரின் பெற்றோர்கள் பெரும் ஆதரவாக இருந்தார்கள். ஒருநாள் வீடு வீடாக வந்து விற்பனை செய்யும் ஒரு சேல்ஸ்மேன் ஒரு புத்தகத்தை விற்கிறார். அதுதான் World Book Encyclopedia. அந்த நிமிடம் அவரது உலகம் விரிகிறது. அதைப் படிக்கத் தொடங்குகிறார். அந்தப் புத்தகத்தின் பக்கத்தில் ஒன்றைக் கூட விடவில்லை.கரைத்துக்குடிக்கிறார். உலகத்தின் தகவல்கள் அவரது விரல் நுனியில். புத்தகத்தின் பக்கங்கள் தீர்ந்துவிட்டன. அவ்வளவு தானா தகவல்கள்? என்று கேட்கிறார். புத்தக நிறுவனமோ புதிய புத்தகத்தைப் பதிப்பிக்காமல் வருடா வருடம் சில பக்கங்களை ஸ்டிக்கர்ஸ்ஸாக அனுப்புகிறது. போரடித்தது அவருக்கு. அவரின் அறிவுப் பசிக்குத் தீனி கிடைக்காமல் தவித்தார். அன்று அவர் மனதில் விழுந்த விதைதான் விக்கிப்பீடியா. அளவற்ற, இலவசத் தகவல் களஞ்சியம்.

சிறுவயதிலேயே பிரபஞ்சம் முதல் கண்ணுக்குத் தெரியாத பக்டீரியா வரை எல்லாவற்றையும் பற்றி படித்ததால் இறை நம்பிக்கை துளியும் இல்லாதவராக வளர்ந்தார். பதின்ம வயதில் பள்ளிக் கல்வியைக் கடுமையாகச் சாடினார். எதைப் படிக்கவேண்டும், படிக்கக் கூடாது என்பது அரசாங்கத்தின் தேர்வாக இருப்பது அவருக்கு உடன்பாடே இல்லை.

கல்லூரிப் படிப்பு அவரது குடும்பத்திற்கு பெரிய பொருளாதாரச் சுமையைக் கொடுத்தாலும் பெற்றோர்கள் விடவில்லை . இவரோ படிப்பில் ஜெட் வேகத்தில் இருந்தார். கல்லூரியில் முதுகலை படிப்பு படிக்கும் முன்பே Ph.D முனைவர் படிப்பிற்கு தேர்வானார். கொஞ்சகாலம் இரு பல்கலைக் கழகத்திலும் ஒரே சமயத்தில் படித்தாலும் ஒரு கட்டத்தில் போரடிக்கவே Ph.Dயை பாதியில் கைகழுவினார். படித்து முடித்து வெளியில் வந்தவுடன் பங்குச்சந்தை நிறுவனத்தில் உயர்பதவியில் வேலை தயாராக இருந்தது. ஆனால் அவரோ இன்டர்நெட் என்ற புதிய தகவல் உலகத்தில் நாளெல்லாம் பலியாகக் கிடந்தார். எண்ணற்ற தகவல்கள் தினம் தினம் கொட்டிக் கொண்டிருந்தால் அறிவுப்பசி கொண்ட ஒருவனுக்கு எப்படி இருக்கும்? கணினி மொழிகளையும் கற்றார். அவரால் இணையத்தில் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை என்ற அளவிற்கு கற்றபின் அவரால் ஒருநாள் கூட ஒரு பங்குச் சந்தை நிறுவனத்தில் வேலை பார்க்க பிடிக்கவில்லை. வேலை பார்த்ததே இன்டர்நெட்டிற்காகத்தானே? என்ன ஆரம்பிக்கலாம் என்று யோசனை. விடலைப் பருவத்தில் இருந்ததால் ஆண்களுக்கான அடல்ட் இணையத்தளத்தை தான் ஆரம்பித்தார். அதிலும் புதுமையாகத் தேடுபொறியை (Search Engine) புகுத்தினார். இன்று அதுபோல நிறைய வந்துவிட்டன. ஆனால் அதற்கு முன்னோடி இவர் ஆரம்பித்த போமிஸ் (Bomis) தான். விளம்பரத்தின் மூலமாக வருவாய் நன்றாக வந்தது. ஆசை தீர்ந்தது. அறிவு வேலை செய்யத் தொடங்கியது.

அவரது ஆழ்மன ஆசை வெளியில் வந்தது. எல்லோருக்குமான இலவசத் தகவல் களஞ்சியம். ஆனால், அது தரமானதாக இருக்க வேண்டும். ஆகையால் மிகச் சிறந்த அறிஞர்களைக் கொண்ட ஒரு குழு , பலதரப்பட்ட சோதனைகளுக்குப் பிறகே கட்டுரைகளை வெளியிடவேண்டும் என்று கடுமையான விதிகளை விதித்து அந்தத் தளத்தை உருவாக்கினார். அதன் பெயர் நியுபீடியா (Nupedia). ஏழுகட்ட பரிசீலனைகள் ஒரு கட்டுரையை வெளியிட என்றால் அது எப்படி வளரும்? ஒரு வருடத்தில் வெறும் 27 கட்டுரைகளே அதில் வந்தன. இந்த வேகத்தில் வளர்ந்தால் நாம் நினைத்தது நடக்காது என்ற முடிவுக்கு வந்தவர் அதேபோல இன்னொரு தளத்தை ஆரம்பித்து விதிகளை எளிமையாக்கினார். வடிவமைப்பை எளிதாக்கினார். அதை ஒரு பொருளாதார நோக்கமற்ற தளமாக பதிந்தார். யார் வேண்டும் என்றாலும் தகவல்களைப் பதியலாம். அதற்கு போதிய சான்றுகளை அதே பக்கத்தில் இணைத்தால் போதும். பரிசீலிக்க ஒரே ஒரு அட்மின். அதுதான் விக்கிப்பீடியா.

அது வெளிவந்த சில மாதங்களில் மக்களை, மாணவர்களை, தகவல் பிரியர்களைக் கவர்ந்திழுத்தது. லட்சக்கணக்கான கட்டுரைகள் பிறந்தன. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த விக்கிப்பீடியா கொஞ்சம் கொஞ்சமாக எல்லா மொழிகளிலும் பரவ ஆரம்பித்தது. எந்த வருவாயையும் எதிர்பார்க்காத தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் வகையில் பீடியாவை கொண்டுவந்தார். விளம்பரங்கள், மாதந்திர சந்தா கட்டணம், வாசிப்பவரின் தகவல் கோரல் என்ற எந்தவகையிலும் வருமானமே தேவையில்லை . கட்டற்ற அறிவுக்களஞ்சியம் எல்லோருக்கும் எளிதில் சேர வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். டொனேஷன் கூட எல்லா சமயமும் கோரமாட்டார்கள். முதலில் கிடைத்த பணம் தீர்ந்தபின்புதான் அடுத்து கோருவார்கள். ஜிம்மி வேல்ஸ் தனக்கு என்று எதையும் இதில் கோரவில்லை . தனது உரிமையை, பங்களிப்பைக் கூட குழுவிற்கு 85% கொடுத்து விலகி தான் நிற்கிறார். தினமும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் உலகின் ஐந்தாவது இணையதளம் விக்கிப்பீடியா. 250 மொழிகளில் நான்கு கோடி கட்டுரைகளைக் கொண்டு மிகப் பிரமாண்டமாக வளர்ந்து வருகிறது. UNESCO போன்ற பன்னாட்டு அரசுக் கூட்டுநிறுவனங்கள் செய்ய வேண்டிய வேலையை இவர் மிகவும் வலிந்து செய்திருக்கிறார் என்றால் அவரது சாதனை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்திய மொழிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே ஒரு லட்சத்திற்கு அதிகமான கட்டுரைகளைக் கொண்டு விளங்குகிறது. அதில் இந்திக்கு அடுத்து தமிழ் மொழிதான் அதிக கட்டுரைகளைக் கொண்டு விளங்குகிறது. தமிழ் மொழிக்கு இன்னும் நிறைய கட்டுரையாளர்கள் தேவைப்படுகிறார்கள். விக்கிபீடியாவில் யார் வேண்டுமென்றாலும் கணக்கைத் தொடங்கி கட்டுரையைப் பதிப்பிக்கலாம். நிறைய தலைப்புகளில் தமிழில் கட்டுரைகள் எழுதப்படவில்லை . நீங்கள் நினைத்தால் தமிழுக்குப் பெருமை சேர்க்க முடியும். வெறும் 2 கோடி பேர்கள் கொண்ட பிலிப்பைன்ஸ் மக்கள் ஆங்கிலத்திற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்கள். தினம் தினம் கட்டுரைகளை எழுதிக் குவித்தவண்ணம் இருக்கிறார்கள். நமது கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், அரசும் கூட இதில் கொஞ்சம் கவனம் செலுத்துவது தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும்.

ஸ்டார்ட் அப் பாடங்கள்

இதை விளம்பரங்கள் கொண்ட ஒரு தளமாகவோ, முகநூல் போல பயனாளிகள் கணக்குத் தொடங்கினால் மட்டுமே உள்ளே செல்லும் என்று வைத்திருந்தாலோ இன்று இதன் குறைந்தபட்ச மதிப்பு 5 பில்லியன் டொலர்கள். ஜிம்மி வேல்ஸ் ஒரு மிகப் பெரிய பணக்காரர் வரிசையில் இருந்திருப்பார். ஆனால் அதுவல்ல அவரது நோக்கம். அறிவு எல்லோருக்கும் பொதுவானது. அது எல்லோரையும் சென்று சேர வேண்டியது. அதற்குத் தடையாக சிறு துரும்பும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே இந்தப் பில்லியன்களைப் பொருட்படுத்தாத மனதைக் கொடுத்திருக்கிறது. என்னைக் கேட்டால் உலகின் மிகப்பெரிய கொடையாளர் இவர்தான். இவர் பணத்தை நேரடியாக கொடுக்கவில்லை. அதைச் சேர்த்தால்தானே கொடுப்பதற்கு? எடுத்துக்கொள் என்று திறந்து வைத்த மனதிற்கு கொடுப்பதன் தேவையே இல்லை.

Post a Comment

Previous Post Next Post